யெஸ் வங்கி பங்குகள் 10 சதவீதம் அளவில் சரிந்தன
யெஸ் வங்கியின் பங்குகள் நேற்று 10 சதவீத அளவுக்கு சரிந்தன. 200 கோடி டாலர் நிதி திரட்ட வங்கி உத்தேசித்திருந்த நிலையில், வங்கியின் பங்குகள் நேற்று பெரும் சரிவைச் சந்தித்தன. காலையில் வர்த்தகம் தொடங்கியபோது 12.27 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தகம் முடியும்போது 10.05 சதவீதம் சரிந்து ரூ.50.55 என்ற விலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையில் 10.40 சதவீதம் சரிந்து ரூ.50.40 என்ற விலையில் வர்த்தகமானது. ஒருகட்டத்தில் 13.68 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.
மொத்தம் 2.29 கோடி பங்குகள் வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 34.5 கோடி பங்குகள் வர்த்தகமானது.
மூலதன அதிகரிப்பு முடிவை வங்கியின் இயக்குநர் குழு நிராகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உரிய முதலீட்டாளர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
50 கோடி டாலர் முதலீடு
சிடாக்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிடாக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் குழுமம் 50 கோடி டாலரை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளிக் கத் தயாராக உள்ளது.
இந்த முதலீட்டுக்கு பங்குச் சந்தை உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புதல் தரும்பட் சத்தில் இயக்குநர்கள் குழுவும் இதை ஏற்கும் என்றே தெரிகிறது. இதுதவிர, எர்வின் சிங் பிரைச் மற்றும் எஸ்பிஜிபி ஹோல்டிங் நிறுவனங்களின் 120 கோடி டாலர் முதலீடு குறித்தும் இயக்குநர்கள் குழு பரிசீலித்து வருகிறது.
