

நடப்பு நிதி ஆண்டுக்குள் இ- காமர்ஸ் கொள்கை வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இ-காமர்ஸ் வரைவு கொள்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது துறை வாரியாகவும், நிபுணர்களின் ஆலோசனைகள், கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.
நாஸ்காம், சிஐஐ உள்ளிட்ட கூட்டமைப்புகளின் ஆலோ சனைகளும் பெறப்பட்டுள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கையாக இது இருப்பதால் விரைவிலேயே இதை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தொழில் கொள்கை மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை செயலர் குரு பிரசாத் மொகபாத்ரா தெரிவித்தார்.
வர்த்தக ரீதியிலான தகவல்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இ-காமர்ஸில் ஏராளமான தகவல்கள் (டேட்டா) உள்ளன. இந்த நிதி ஆண்டுக்குள் இதைக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளதாக அவர் கூறினார்.
சமீபத்தில் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தகவல் தொகுப்பு (டேட்டா) காப்பு மசோதாவைக் கொண்டு வந்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தனிநபர் தகவல் தொகுப்புகளும் சேர்க்கப்பட்டன. இதன்படி தனிநபர் (வாடிக்கையாளர்கள்) பற்றிய தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என அந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனி நபர் அல்லாத தகவல் தொகுப்புகளும் எவ்வித கட்டுப்பாடுமின்றி உள்ளன. குறிப்பாக இ-காமர்ஸ் டேட்டா, பருவ நிலை டேட்டா, குறிப்பிட்ட பகுதி மக்களின்உணவுப் பழக்க வழக்கம் பற்றிய தகவல் தொகுப்பு என பல வகைகளில் தகவல்கள் திரட்டப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.
இ - காமர்ஸ் வரைவு
இ-காமர்ஸ் என்பது பரந்துபட்ட துறையாகும். குறிப்பாக இதில் தகவல் தொழில்நுட்பம், சில்லரை வர்த்தகம், பணப் பரிவர்த்தனை, நுகர்வோர் பற்றிய விவரங்களும் அடங்கும். கடந்த பிப்ரவரி மாதம் இ-காமர்ஸ் வரைவு கொள்கை வெளியிடப்பட்டது. கொள்கை வகுப்பில் பல்வேறு அமைச்சகங்களும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்டவையும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளன.