

வெங்காய விலை உயர்வால் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை, வர்த்தகர்களுக்கே பயன் கிடைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.
பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.
நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது.
வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.
வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. வெங்காயம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது. இந்தநிலையில் வெங்காய விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை, வர்த்தகர்களுக்கே பயன் கிடைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெங்காய உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த நிபுணரான கிஷோர் திவாரி கூறியதாவது:
‘‘வெங்காய விலை உயர்வால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ள இந்த தருணத்தில் மகாராஷ்டிர மாநில விவசாயிகளிடம் வெங்காயம் இல்லை. அறுவை முடிந்து அவை ஜனவரி மாதமே வரும். இதனால் வெங்காயம் விற்பனையால் வியாபாரிகளுக்கே பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளது.
விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. 5 ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகள் வழக்கமாக ஈட்டும் லாபமான ஒரு லட்சத்தை தான் இந்தமுறையும் பெற்றுள்ளனர். ஆனால் மழையால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டால் இழப்பு தான். கூடுதல் விலையால் ஒரு சில விவசாயிகள் லாபம் அடைந்திருந்தாலும் மழையால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இது ஈடுகட்டவில்லை.’’ எனக் கூறினார்.