

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட்-ன்தலைமை நிர்வாக அதிகாரியாகசுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின்,ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அவ்விருவரும், அப்பொறுப்புகளில் இருந்து நேற்று முன்தினம் விலகிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை இருந்து வருகிற நிலையில், தற்போது கூடுதலாக ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆல்ஃபபெட் உருவாக்கம்
லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின்இருவரும் 1998-ம் ஆண்டு கூகுள்நிறுவனத்தை உருவாக்கினர். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள், உலகின் முதன்மையான தேடு தளமாக திகழ்கிறது. 2015-ம் ஆண்டு ஆல்ஃபபெட் என்று புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதன்கீழ் கூகுள் கொண்டு வரப்பட்டது. லாரி பேஜ் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாகவும், செர்கி பிரின் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளும் தற்போது சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு இனி தனித்தனியே இரண்டு சிஇஓ-க்கள் தேவையில்லை. சுந்தர் பிச்சை அந்த இரு நிறுவனங்களுக்கும் சிஇஓ-வாக இருப்பார். அந்நிறுவனங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் அனைத்தையும் அவரே கவனித்துக் கொள்வார். சுந்தர் பிச்சை 15 ஆண்டுகளாக எங்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமான தேர்வாக தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர். லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் இருவரும் இயக்குநர்கள் குழுவில் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறியபோது, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும், தொழில் நுட்பங்களின் எல்லைகளை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போதைய மாற்றம் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் அன்றாட வேலை அமைப்பை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவித்தார்.