

பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்ததாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படுவதையொட்டியே இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரத்தை வைத்தே எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றன.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை குறித்து நிதியமைச்சகம் தனித்து முடிவெடுக்க முடியாது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூடியே இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க முடியும். பெட்ரோலுக்கு மத்திய கலால் மற்றும் சுங்க வரியை தவிர மாநில அரசுகளும் வரி வசூலிக்கின்றன.
இதுபற்றி மாநிலங்களும் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.