

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை (டிஹெச்எஃப்எல்), திவால் நட வடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனம் திவால் நடைமுறைக்கு உட்படுத் தப்படுவது இதுவே முதல் முறை.
டிஹெச்எஃப்எல் தொடர்பான நிதி சிக்கலை ஆய்வு செய்வதற்கு என்று ரிசர்வ் வங்கி குழு ஒன்றை அமைத்து இருந்தது. அதைத் தொடர்ந்தே தற்போது அந்நிறுவன விவகாரம் என்சிஎல்டி-க்கு மாற்றப்பட்டு உள்ளது.
ஜூலை மாத நிலவரப்படி வங்கிகளுக்கு டிஹெச்எஃப்எல் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.83,873 கோடியாகும். இதில் சொத்து ஈட்டு கடன் ரூ.74,054 கோடியாகும். இந் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கிகள், கடன் தொகையை வாராக் கடனாக அறிவித்துள்ளன. இந்நிலையில் நிதி நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு இந்நிறுவனம் திவால் நடைமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறைகளுக்குப் பிறகு நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது. அதில் அதிக தொகைக்கு கேட்கும் நிறுவனம் வசம் டிஹெச்எஃப்எல் நிறுவனம் ஒப்படைக்கப்படும். ஏற்கெனவே கவுதம் அதானி குழுமம் மற்றும் பிரமள் குழும நிறுவனங்கள், டிஹெச்எஃப்எல் நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.