

இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமென்றால் கார்பரேட் வரி எனப்படும் நிறுவன வரியை குறைக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரிசர்வ் வங்கியும் தற்போது வட்டிக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்தது.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் விதமாக மத்திய அரசு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இந்த நிலையில் முதலீடை ஈர்க்கும் வகையில் வரிகுறைப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்தியாவில் பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முதலீடுகள் அவசியம். முதலீடுகள் அதிகரிக்க கார்பரேட் வரியை குறைக்க வேண்டியது அவசியம்’’ எனக் கூறினார்.