

இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம் 3,206 கோடி ரூபாய் (50 கோடி டாலர்) திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்த தொகையினை அலிபாபா, சாப்ட்பேங்க் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களிடமிருந்து திரட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முதலீட்டுக்கு பிறகு நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை என்றும் ஆனால் இன்னும் சில நாட்களில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த இணைப்பு உறுதியாகி விட்டது என்பதை பல தகவல்களும் உறுதி செய்கின்றன.
இது குறித்து ஸ்நாப்டீல், சாப்ட்பேங்க், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள் கருத்து கூற மறுத்துவிட்டன.
இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டால் அலிபாபா நிறுவனம் இந்தியாவில் நேரடியாக செய்யும் முதல் முதலீடு இதுதான். அலிபாபா நிறுவனத்தின் துணை நிறுவனமான அன்ட் பைனான் ஸியல் சர்வீசஸ் நிறுவனம் ‘ஒன்97’ (பேடிஎம்) நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலீடு செய்தது.
அலிபாபா நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஸ்நாப்டீல் மேலும் நிதி திரட்ட வேண்டிய நிலையில் இல்லை. போதுமான அளவுக்கு நிதி இருக்கிறது என்று கடந்த மார்ச் மாதம் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி குணால் பஹல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.