எஸ்ஸார் ஸ்டீல் - ஆர்சிலர்மிட்டல் இணைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: திருப்புமுனையாக திவால் சட்ட வாரிய தலைவர் கருத்து

எஸ்ஸார் ஸ்டீல் - ஆர்சிலர்மிட்டல் இணைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: திருப்புமுனையாக திவால் சட்ட வாரிய தலைவர் கருத்து
Updated on
1 min read

எஸ்ஸார் ஸ்டீல்-ஆர்சிலர்மிட்டல் இணைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திவால்சட்ட நடைமுறையில் புதிய திருப்புமுனையாக இருக்கும் என்று திவால் சட்ட வாரியத்தின் தலைவர்எம்.எஸ்.சாஹூ கருத்து தெரிவித்துள்ளார்.

திவால் சட்டம் நடைமுறைப்பட்டதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு முறை திவால் நடைமுறை தொடர்பான வழக்குகள் வரும்போதும் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் திவால் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. அதேபோல் எஸ்ஸார் ஸ்டீல்-ஆர்சிலர்மிட்டல் இணைப்பு விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

திவால் நடவடிக்கையில் உள்ள எஸ்ஸார் ஸ்டீல் கடனைப் பங்கிட்டு கொள்வதில் கடனாளர் குழுவுக்கே முழு அதிகாரம் எனக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார். கடன் மற்றும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் தொழில்நிறுவனங்களுக்கு விடுதலை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது திவால் சட்டம்.

இந்தச் சட்டத்தின்கீழ் நிறுவனங்கள் தங்களை அறிவித்துக்கொண்டால், திவால் அமைப்பின் மூலம் அதன் நிதி நிலைக்கு ஒரு முடிவு எட்டப்படும். நிறுவனத்தை விற்பதோ அல்லது சொத்துகளை விற்று கடனை அடைப்பதோ திவால் நடைமுறை மூலம் செயல்படுத்தப்படும். இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல்இதுவரை பெரும்பாலான நிறுவனங்கள் திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்கீழ் பெரும் கடன் நெருக்கடியில் இருந்த எஸ்ஸார் ஸ்டீல் திவால் நடைமுறைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

ஆனால், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ரூ.42 ஆயிரம்கோடிக்கு வாங்கத் தயாராக இருந்தது ஆர்சிலர் மிட்டல் நிறுவனம். ஆனால், கடன் தொகையைப் பங்கிடுவதில் ஆப்ரேஷனல் கிரெடிட்டர்களுக்கும், ஃபைனான்ஷியல் கிரெடிட்டர்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன. இதுதொடர்பாக என்சிஎல்ஏடி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கடனாளர்களின் குழு மேல்முறையீடு செய்தது.

அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த நவம்பர் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கடன் தொகையைப் பங்கிட்டுக்கொள்வதில் என்சிஎல்ஏடி தலையிடக்கூடாது எனக் கூறியது. இந்தத் தீர்ப்பின் மூலம் ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் எஸ்ஸார் ஸ்டீலை வாங்குவதற்கு நீண்டகாலமாக இருந்த தடை விலகியது. அதேசமயம் இந்தத் தீர்ப்பின் மூலம் திவால் சட்டம் மேலும் வலுவடைந்திருக்கிறது.

திவால் நடைமுறைகளில் அதிக தெளிவும், புரிதலும் பல தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று எம்.எஸ்.சாஹூ கூறினார். மேலும் உச்ச நீதிமன்றம் திவால்நடைமுறை தீர்வுக்கான 330 நாள் என்ற வரம்பையும் தளர்த்தியுள்ளது. இதன் மூலம் தவிர்க்கமுடியாத விவகாரங்களில் கெடுவை நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in