

மும்பை
வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிற நிலையில், ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளது. தொலை தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு, சந்தையில் முன்னணியில் இருந்த ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. இந்நிலையில் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சென்ற ஆண்டு ஒன்றாக இணைந்தன. அதைத் தொடர்ந்தும் அந்நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. செப்டம்பர் மாதம் முடிந்த இரண்டாம் காலாண்டில் ரூ.50,921 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்தது.
இதுதவிர, ஆதித்யா பிர்லா குழும நிறுவனமான ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் உலக அளவில் மிகப் பெரிய அலுமினியம் மற்றும் தாமிரம் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது உலகளாவிய அளவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர், இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை ஆகியவற்றின் காரணமாக அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தவிர, அக்குழுமத்தின் பிற நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதன் விளைவாக குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ.63,700 கோடியில் (9.1 பில்லியன் டாலர்) இருந்து ரூ.42,000 கோடியாக (6 பில்லியன் டாலர்) குறைந்து உள்ளது. மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் ரூ.21,000 கோடி அளவில் இழப்பை சந்தித்து உள்ளார் பிர்லா.