டிஹெச்எஃப்எல் நிறுவனத்தை வாங்க அதானி, பிரமள் குழுமங்கள் ஆர்வம்

டிஹெச்எஃப்எல் நிறுவனத்தை வாங்க அதானி, பிரமள் குழுமங்கள் ஆர்வம்
Updated on
1 min read

புதுடெல்லி

கவுதம் அதானி குழுமம் மற்றும் பிரமள் குழும நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன. இவ்விரு நிறுவனங்கள் தவிரஅப்பல்லோ குழு நிறுவனமும் இந்நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் மீதுதிவால் நடைமுறைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. இந்த நடை முறைகளுக்குப் பிறகு நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் அதிக தொகைக்கு கேட்கும் நிறுவனம் வசம்டிஹெச்எஃப்எல் நிறுவனம் ஒப்படைக்கப்படும்.

ஆர்பிஐ பிரதிநிதி ஏற்கெனவே ரிசர்வ் வங்கி, டிஹெச்எஃப்எல் நிறுவன இயக்குநர் குழுவின் செயல்பாடுகளை முடக்கி தனது பிரதிநிதியை நியமித்துள்ளது. டிஹெச்எஃப்எல் நிறுவனம் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அளிக்க வேண்டியிருப்பதால் ஆர்பிஐ பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஆர். சுப்ரமணியகுமார் தற்போது ரிசர்வ் வங்கியால் டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, 45ஐஇ (2)-ன் படி இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனமான டிஹெச்எஃப்எல் தற்போது தேசிய நிறுவன சட்ட வாரியத்துக்கு (என்சிஎல்டி) திவால் நடைமுறை சட்டத்தை செயல்படுத்தும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கியல்லாத நிதி நிறுவனம் திவால் நடைமுறைக்கு உட்படுத்தப்படும் முதலாவது நிறுவனம் டிஹெச்எஃப்எல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று 3 பேரடங்கிய ஆலோசனை குழுவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. இக்குழுவில் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் அன்றாட அலுவல் பொறுப்புகள் ஏதும் இல்லாத செயல் தலைவர் ராஜீவ் லால், ஐசிஐசிஐ புரூடன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் செயல் இயக்குநர் என்.எஸ். கண்ணன், ஆம்பி அமைப்பின் தலைமைச் செயலர் என்.எஸ். வெங்கடேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரமணிய குமாருக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவர்.

ஜூலை மாத நிலவரப்படி வங்கிகளுக்கு டிஹெச்எஃப்எல் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.83,873 கோடியாகும். இதில் சொத்து ஈட்டு கடன் ரூ.74,054 கோடியாகும். இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கிகள், கடன் தொகையை வாராக் கடனாக அறிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in