

மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் கார் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் டொயோடா கார் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் ஜூலை மாதத்தில் 1,21,712 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனையானதை விட 20.1 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிறுவனம் 90,093 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிய ரகக் கார்களான ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்டவற்றின் விற்பனை 31 சதவீதம் அதிகரித் துள்ளது. ஸ்விஃப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ், டிஸையர் ஆகிய கார்களின் விற்பனை 13.9 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மொத்தம் 11,307 கார்கள் ஏற்றுமதி யாகியுள்ளன.
ஹூண்டாய்
சென்னையில் ஆலையைக் கொண்டுள்ள கொரிய நிறுவனமான ஹூண்டாய் ஜூலை மாதத்தில் 50,408 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்ததைக் காட்டிலும் 5 சதவீதம் கூடுதலாகும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் 48,014 கார்களை விற்பனை செய்திருந்தது.
உள்நாட்டில் 36,500 கார்களை விற்பனை செய்துள்ள ஹூண்டாய், 13,908 கார்களை ஏற்றுமதி செய்துள் ளது. இருப்பினும் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
டொயோடா
டொயோடா கிர்லோஸ்கர் நிறுவன கார்கள் விற்பனை ஜூலை மாதத்தில் 1 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்நிறுவனம் 13,699 கார்களை விற்பனை செய்திருந்தது. 2014ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 13,845 கார்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் உள்நாட்டில் 12,070 கார்களை விற்பனை செய்ததோடு 1,629 எடியோஸ் ரகக் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்நிறுவனத்தின் ஜூலை மாத வாகன விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 34,652 வாகனங்களை இந்நிறுவனம் விற் பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 35.567 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா
இந்நிறுவனம் ஜூலை மாதத்தில் 18,606 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15,709 வாகனங்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1,122 பிரையோ, 6,676 ஜாஸ், 4,5899 அமேஸ், 909 மொபிலியோ மற்றும் 5,180 செடான் சிட்டி கார்களை இந்நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
இந்நிறுவனம் 40,154 வாகனங் களை கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 39,629 கார்களை மட்டுமே விற்பனை செய் துள்ளது. உள்நாட்டில் இந்நிறுவன வாகன விற்பனை கணிசமாக சரிந் துள்ளது. 5,078 கார்களை இந்நிறு வனம் ஏற்றுமதி செய்துள்ளது.
ராயல் என்பீல்டு
ஐஷர் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமான ராயல் என்பீல்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் 40,760 மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிறுவனம் 27,314 மோட்டார் சைக்கிளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் ஏற்றுமதி 72 சதவீதம் அதிகரித்து 873 மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 514 மோட்டார் சைக்கிளை ஏற்றுமதி செய்திருந்தது.
டிவிஎஸ் மோட்டார்ஸ்
தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை ஜூலை மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 2,18,321 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 2,14,324 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 15.3 சதவீதம் அதிகரித்தது. மொத்தம் 42,677 வாகனங்கள் ஏற்று மதி செய்யப்பட்டுள்ளன.