

வோடபோன், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை சுமார் 45000 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் தொகையை செலுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ள வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிகப்படியான போட்டி உருவானது. இதனால் தொடர்ந்து சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்குப் போட்டி நிறுவனங்கள் ஆளாயின.
இதனால், வோட போன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன.
இந்த தொகை பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டன. கடந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் நிதிநிலை மிக மோசமான அளவை எட்டியது.
தங்களால் இந்த நிலையில் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்றும் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தன. ஆனால் இந்த தொகை செலுத்தக் கூடிய அளவில் இருந்தும் அதனை நிறுவனங்கள் செலுத்தவில்லை என்பது அரசின் புகார்.
2018-19- நிதியாண்டில் வோடபோன் ஐடியாவின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.37,000 கோடி. இதில் அரசு கேட்கும் தொகைக்காக ரூ.18,470 கோடியையும் இந்த நிறுவனம் ஒதுக்கியிருந்தது. எனவே அரசுக்குச் சேர வேண்டிய தொகையை செலுத்தக் கூடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதுபோலவே, பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை ரூ.6,164 கோடி, ஆனால் செலுத்தாததினால் விளைந்த வட்டி, அபாரதம், அபராத வட்டி என்று ரூ.22, 286 கோடியாக அதிகரித்தது. செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.28,450 கோடியாக உள்ளது. பார்தி ஏர்டெல்லின் 2018-19 மொத்த ஆண்டு வருவாய் சுமார் ரூ.50,000 கோடி ஆகும்.
ஏர்டெல் செலுத்த வேண்டிய தொகை 11,746 கோடியாகும். வோடபோன் செலுத்த வேண்டிய தொகை 23,920 கோடி ரூபாயாகும். ஜியோ நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை 6,670 கோடி ரூபாயாகும். மொத்த தொகை சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் தொகையை செலுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது.