Published : 20 Nov 2019 11:12 AM
Last Updated : 20 Nov 2019 11:12 AM

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஓசூரில் தொழில் தொடங்க ஆர்வம்: எல்காட் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் தகவல்

விஜயகுமார்

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் பெங்களூருவை ஒட்டியுள்ள ஓசூரில் தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் ஐஏஎஸ் தெரிவித்தார்.

பெங்களூருவில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில்தமிழக அரசின் தொழில்நுட்பத்துறையின் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு, எல்காட் (தமிழ்நாடு மின்னணு நிறுவனம்) மேலாண்மைஇயக்குநர் விஜயகுமார் ஐஏஸ், பொது மேலாளர் பி.இவனேசன், மேலாளர் என்.எம்.குமார் ஆகியோர் தமிழக அரசின் சலுகைகள் குறித்து விவரித்த‌னர்.

‘இந்து தமிழ்' நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் எல்காட் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் கூறியதாவது:தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த துறையில் தமிழகம் வேகமாக முன்னேறிவருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தமிழகதொழில்நுட்பத்துறையின் சிறப்புசலுகைகளும், முதலீட்டாளர்களுக்கு உகந்த விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழக தொழில்நுட்பத்துறையின்கீழ் இயங்கும் எல்காட் (ELCOT- தமிழ்நாடு மின்னணு நிறுவனம்) சார்பில் சென்னை, மதுரை, கோவை, சேலம், ஓசூர் உட்பட 8 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவீதவருமான வரி விலக்கும், அடுத்த5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வரிவிலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பத்திரப் பதிவு,ஜி.எஸ்.டி. சேவை வரியிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் திட்டங்களை முதலீட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் பெங்களூரு, ஹைதராபாத், நொய்டா உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது விளக்கக் காட்சிகள் (ரோடு ஷோ) நடத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் எலக்ட்ரானிக் சிட்டியில் நடத்திய விளக்க காட்சியில் முதலீட்டாளர்கள் மற்றும் புத்தாக்க தொழில்முனைவோரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கர்நாடகா, ஆந்திராவை காட்டிலும் தமிழகத்தில் நிலையான அரசியல் சூழல் நிலவுவதாலும் குறைந்த விலையில் நிலம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்,சமூக பொருளாதார சூழ்நிலைகள்இருப்பதால் ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. இதன் வெளிப்பாடாகவே கடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Global Investers Meet) ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குவிந்தன. இதில் 50 சதவீதத்துக்கும் அதிக‌மாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் தற்போது பருவநிலை மாற்றம், கடும் போக்குவரத்து நெரிசல், சமூக பிரச்சினைகள் ஏற்படுவதால் அந்த நிறுவனங்கள் தமிழகத்துக்கு இடம்பெயர ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக பெங்களூருவை ஒட்டியுள்ள ஓசூரில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவுவதாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதாலும் அங்கு இடம்பெயர விரும்புகின்றன.

மத்திய அரசின் உடான் திட்டத்தின்கீழ் தற்போது அங்கு விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. முதல்கட்டமாக 174.5 ஏக்கரில் நிலமும், 62100 அடி பரப்பளவில் கட்டிடமும் தயாராக இருக்கிறது. இதில் தற்போது யூ.எஸ்.டி. குளோபல் டெக்,சந்துரு சாஃப்ட், எமினென்ட் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.வெகுவிரைவில் ஓசூருக்கு வேறு பலதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், புத்தாக்க நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வர உள்ளன. இதனால் ஏராளமான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், ஓசூரை சுற்றியுள்ள மாவட்டங்கள் முன்னேற்றமும் அடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x