Published : 19 Nov 2019 04:54 PM
Last Updated : 19 Nov 2019 04:54 PM

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினால் யாருக்குப் பயன்? - மகாராஷ்டிரா விவசாயிகள் குமுறல்

பயிர் இழப்பினால் வாடும் விவசாயிகள் பிரதமரின் பாஸல் பீமா யோஜனா என்ற பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினால் காப்பீட்டு நிறுவனங்கள்தான் பயனடைகின்றன என்று விவசாயிகள் அமைப்பினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக தி இந்து பிசினஸ் லைன் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா கிசான் சபாவைச் சேர்ந்த ராஜன் கிஷிர் சாகர், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிறைய லாபம், ஆனால் விவசாயிகளுக்கோ வறட்சிதான் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, 2018-ம் ஆண்டில் 1,237 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், ஆனால் அதே வேளையில் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் பகுதியிலிருந்து ரூ.1237 கோடி லாபம் ஈட்டின. (இந்தப் புள்ளி விவரம் தகவலுரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாகும்)

“காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு விவசாயி தற்கொலையிலும் ரூ.1 கோடி லாபம் ஈட்டியது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் நிறைய கோளாறுகள் உள்ளன. பயிர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கணக்கிட காப்பீட்டு நிறுவனங்களிடம் போதிய ஆள்பலமோ, மதிப்பிடுவதற்கான போதிய வழிமுறைகளோ இல்லை.

பயிர்ச்சேதத்தைக் கட்டுப்படுத்தும் செலவை விட பயிர்ச்சேதம் அதிகம் ஏற்படுகிறது, இதன் பிறகான விளைச்சல் என்பது பயிரைப்பொறுத்து மாறும். அதாவது பாசன பகுதியா அல்லது மழையினால் பயிர்செய்யப்படும் பகுதியா என்பதைப் பொறுத்து விளைச்சல் மாறுபடும். இந்த தொடக்க நிலை விளைச்சல் குறைவாக இருக்கும் போது குறிப்பிட்ட பிரிமியம் தொகைக்கான கிளைம் தொகை விவசாயிகளுக்குக் குறைவாகவே கிடைக்கும். எனவே மழையை நம்பியிருக்கும் சோயாபீன் விவசாயிக்கு பயிர்க்காப்பீடுத் தொகை பாசன விவசாயியை விட குறைவாகவே கிடைக்கும்.

மகாராஷ்டிரா முழுதும் பயிருக்கான பிரிமியம் ஒரே அளவில்தான் இருக்கிறது, ஆனால் சிலவேளைகளில் சேவை மையங்களினால் உறிஞ்சப்படும் விவசாயிகள் பிரிமியம் தொகையை அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது, கரீப் பயிர்கள், ராபி பயிர்கள், மற்றும் வணிக ரீதியான பயிர்கள் / தோட்டப் பயிர்கள் ஆகியவற்றுக்கு முறையே 2%, 1.5%, 5% என்று விவசாயிகள் பிரிமியம் தொகை செலுத்துகின்றனர். பிரிமியம் தொகைக்கும் விவசாயிகள் செலுத்தக் கூடிய காப்பீட்டுக் கட்டணங்களுக்கும் உள்ள இடைவெளித் தொகை மானியமாக வழங்கப்படுகின்றன. இந்த மானியத் தொகையை மத்திய மாநில அரசுகள் சரிசமமாகப் பகிர்கின்றன.

இந்நிலையில்தான் கிஷிர் சாகர் அரசின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறார், “காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்கும் அரசுகள் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக வறட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்க விரும்புவதில்லை. எந்த ஒரு விவசாயிக்கும் பயிர் நஷ்டத்துக்கான முழு நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் என்று கருதினோம் ஆனால் இப்போது இதனால் பயனடைவது யார் என்று தெரியாமல் குழம்பி நிற்கிறோம்” என்றார்.

தெர்கவான் பகுதியைச் சேர்ந்த ககாசாஹேப் தோட் என்ற விவசாயி, “நாங்கள் துயரத்தில் இருக்கிறோம். வாழ்வாதாரச் சிக்கலில் தவித்து வருகிறோம். காப்பீட்டு நிறுவனங்கள் பதிலளிப்பதில்லை, மகாராஷ்டிராவில் அரசே இல்லை” என்று சாடினார்.

பீத் மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் காப்பீட்டு நிறுவனத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தினர். 2018 காரிப் பயிர்கள் நாசமடைந்ததற்கான காப்பீட்டு கிளைம் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கவில்லை என்று சாடினர். தொடர்ந்து உறுதி அளித்தனர், ஆனால் விவசாயிகள் கணக்கில் இன்னமும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடுத் தொகை வந்து சேரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாயம் மற்றும் பொருளாதார நிபுணரான, எச்.எம்.தேசரதா, இவர் திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர், கூறும்போது, பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வர்த்தக நோக்கோடு அணுகுகின்றன. ”காப்பீட்டு நிறுவனங்கள், இடைத்தரகர் இடையே இருக்கும் வலைப்பின்னலினால் விவசாயிகள் சுரண்டபப்ட்டு வருகின்றனர். அரசு மற்றும் விவசாயிகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன” என்று கடுமையாகச் சாடினார்.

அவுரங்காபாத்தில் உள்ள தேர்கவான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம்கிஷன் என்ற விவசாய பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ல் அறிவிக்கப்பட்டவுடன் கொண்டாடினார். மராத்வாத பகுதியில் ராம்கிஷனுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டம் பெரிய நிம்மதியை அளித்தது. இந்தப் பகுதி எப்போதும் வறட்சியின் பிடியில் இருப்பது, பருவநிலை தவறிய மழையும் இங்கு பயிர்ச்சேதங்களுக்கு பெரிய காரணமாக விளங்குகிறது.

ஆனால் இன்று பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என்று கூறும் ராம்கிஷன், “விவசாயக்குடும்பத்தில் பிறப்பதே பாவம் என்று நினைக்கிறேன். விவசாயியாவது அதைவிடவும் பெரிய பாவம்” என்று குமுறுகிறார். மாதுளம், சாத்துக்குடி பயிர்கள் மூழ்கியுள்ளன, சோயாபீன், பருத்திப் பயிர்கள் அழுகிவிட்டன. ’எங்களுக்கு இயற்கையிடமிருந்தும் உதவியில்லை, அரசிடமிருந்தும் உதவியில்லை’ என்றார் ராம்கிஷன்.

“இந்தப் பகுதியில் விவசாயிகளுக்கு வலுவான காப்பீடு தேவை. நாங்கள் கடும் வறட்சியை எதிர்கொள்கிறோம். விளைச்சலுக்கான உத்தரவாதம் இல்லை அதனால்தான் காப்பீட்டு பிரிமியம் செலுத்துகிறோம். லாபம் வரவில்லை என்றாலும் போட்டதையாவது எடுக்க வேண்டமா? ஆனால் என் அனுபவம் இதில் மோசமானது, அக்டோபர் மாத மழை பயிர்களை காலி செய்து விட்டது, ஆனால் இன்று வரை அரசிடமிருந்தோ காப்பீட்டு நிறுவனத்திடமிருந்தோ ஒத்தை ரூபாய் இழப்பீடு வரவில்லை” என்றார் ராம்கிஷன்.

கடந்த ஆண்டு இழந்த சாத்துக்குடி பயிருக்காக ரூ.77,000 இழப்பீடு எதிர்பார்த்தார் ராம்கிஷன் ஆனால் அவருக்கு கிடைத்தது ரூ.25,000 மட்டுமே, ஆனால் இது கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்று அங்கு பார்க்கப்பட்டு வருகிறது, சில சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை இழப்பீடு வழங்கிய அவலமும் நடந்துள்ளது.

கட்டுரை ஆசிரியர்: ராதேஷ்யாம் ஜாதவ், தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x