1000 டன்கள் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி: விலை குறைய வாய்ப்பு

1000 டன்கள் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி: விலை குறைய வாய்ப்பு
Updated on
1 min read

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் முதல்கட்டமாக 1000 டன்கள் வெங்காயம் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.

பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.

நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன. இதுபோன்ற நடவடிக்கையால் தற்போது விலை சற்று குறைந்துள்ள போதிலும் சில்லறை விற்பனையில் கிலோ 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நாடுகளில் இருந்து கடல் வழியாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் அளவுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதல்கட்டமாக 1000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வெங்காயம் அடுத்த வாரத்தில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in