Published : 16 Nov 2019 11:20 AM
Last Updated : 16 Nov 2019 11:20 AM

எஸ்ஸார் ஸ்டீல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு இருந்த தடை விலகியது

எஸ்ஸார் நிறுவனம் தொடர்பான திவால் நடைமுறை வழக்கில், கடன்தொகை பங்கீட்டில் கடனாளர் குழுவுக்கு முழு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்து உள்ளது. தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) அதில் தலையிடக் கூடாது என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் ஆர்சிலர் மிட்டல், எஸ்ஸார் நிறுவனத்தை வாங்குவதில் இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

இரும்பு தயாரிப்பு நிறுவனமான எஸ்ஸார் ஸ்டீல் சில ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய அளவில் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அதைத் தொடந்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனம் திவால் நடைமுறை சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. திவால் நிலையில் உள்ள எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை, மற்றொரு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டல் ரூ.42,000 கோடிக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது. அதற்கான ஒப்புதலை கடந்த ஜுலை மாதம் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கியது. அப்போது ஆர்சிலர் மிட்டல் வழங்கும் ரூ.42,000 கோடியை கடனாளிகளுக்கு பகிர்ந்து கொடுப்பது தொடர்பாக என்சிஎல்ஏடி தீர்ப்பு ஒன்று வழங்கியது.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்களில், நிறுவனமூலதனத்துக்கு கடன் வழங்கியவர்கள் (பைனான்சியல் கிரிடிட்டர்ஸ்), நிறுவனத்துக்கான தயாரிப்பு பொருட்கள் வழங்குதல் போன்ற அன்றாட செயல்பாடுகளுக்கு கடன் வழங்கியவர்கள் (ஆப்ரேஷனல் கிரிடிட்டர்ஸ்) என இரு தரப்பினர்கள் உள்ளனர்.

அவர்களுக்கான கடன் தொகை பிரித்து கொடுப்பதற்கு கடனாளர்கள் குழு (சிஓசி) உருவாக்கப்பட்டது. மூலதனம் தொடர்பாக கடன் அளித்தவர்களை முக்கிய தரப்பாக கொண்டு, அவர்களுக்கு அதிக அளவு தொகை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படது.

ஆனால் கடந்த ஜூலை மாதம் என்சிஎல்ஏடி வழங்கிய தீர்ப்பில் பைனான்சியல் கிரிடிட்டர்ஸ் மற்றும் ஆப்ரேஷனல் கிரிடிட்டர்ஸ் இரண்டு தரப்புக்கும் சம அளவிலேயே அவர்களின் கடன் தொகை பிரித்து அளிக்க வேண்டும் என்று கூறியது. அதாவது பைனான்சியல் கிரிடிட்டர்ஸ் மற்றும் ஆப்ரேஷனல் கிரிடிட்டர்ஸ் இரு தரப்புக்கும் அவர்களது கடன் தொகையில் 60.7 சதவீதம் அளவில் வழங்க வேண்டும் என்று கூறியது.

இதை எதிர்த்து கடனாளர்கள் குழு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடன் தொகையை பிரித்து கொடுப்பதில் கடனாளர்கள் குழுவுக்கு உரிமை உண்டு. அதில் என்சிஎல்ஏடி தலையிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் தங்கள் முழு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x