மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ. 75000 கோடி பென்டகன் ஒப்பந்தம்: அமேசான் கடும் எதிர்ப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ. 75000 கோடி பென்டகன் ஒப்பந்தம்: அமேசான் கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பணிகளை செய்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் இணையதள சார்ந்த பணிகளை செய்வதற்கான சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. ஆனால் உரிய தகுதிகள் இருந்தும் தங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாமல் போனதற்கு அரசியல் தலையீடே காரணம் என அமேசான் குற்றம்சாட்டியுள்ளது.

அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாகவும், மற்றொரு நிறுவனத்துக்கு எதிராகவும் செயல்படுவது வேதனையளிக்கிறது.

அரசியல் நோக்குடன் அரசு நிர்வாகத்தில் செயல்பாடுகள் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல. பென்டகனின் கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பணிகள் ஒப்பந்தத்தை ஒரு சார்பாக வழங்கப்பட்டிருப்பது சரியானதல்ல. இதனை பாகுபாடாகவே கருத முடியும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பென்டகனின் முடிவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தை அணுக அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in