ஏபிஎம்சி-யை கலைத்துவிடலாம் விவசாயிகள் பயன் பெற இ-நாம் இணையதளம்: மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

டெல்லியில் நடைபெற்ற கிராமப்புற மற்றும் வேளாண் நிதி குறித்த 6-வது உலக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் நடைபெற்ற கிராமப்புற மற்றும் வேளாண் நிதி குறித்த 6-வது உலக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated on
1 min read

மாநில அரசுகள் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு இ-நாம் மின்னணு தளத்துக்கு மாற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது சில மாநிலங்களில் வேளாண் உற்பத்தி விற்பனை குழு (ஏபிஎம்சி) மூலமான வேளாண் கொள்முதல் நடைபெறுகிறது. இதை மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இ-நாம் இணையதளம் மூலமான விற்பனைக்கு மாறுவதன் மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு மிகச் சிறந்த விலையைப் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் நபார்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இ-நாம் இணையதளமானது ஒருங்கிணைந்த நாடு முழுவதும் செயல்படக் கூடிய இணையதளமாகும். ஏபிஎம்சி-களுக்குப் பதிலாக அவற்றை இ-நாம் தளத்துடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏபிஎம்சி மூலமாக ஏமாற்றப்படுவதை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக மத்திய அரசு உருவாக்கியுள்ள இ-நாம் மூலமான வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகள் பயனடைவர். தற்போது பல்வேறு வேளாண் சந்தைகளை அணுகுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன.

மேலும் மாநிலங்களில் உள்ள வேளாண் விற்பனைகுழுக்கள் மிகச் சிறப்பாக செயல்படாத சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க ஒரேவழி அவற்றை இ-நாம் இணையதளம் மூலம் இணைப்பதுதான் என்றார்.

இது தொடர்பாக ஏபிஎம்சி-யை செயல்படுத்தும் மாநிலங்களுடன் பேச்சு நடத்தி அவற்றைக் கைவிட்டு இ-நாம் இணையதளத்துக்கு மாறுவதற்கு வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.

தற்போது 8 மாநிலங்களில் 21 இ-நாம் மண்டிகள் உள்ளன. இவை உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்டமாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவை மாநிலங்களிடையிலான இ-நாம் ஆக செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு மிகச் சிறந்த விலை கிடைக்கிறது என்று குறிப்பிட்டார்.

தற்போது மாநிலங்களிடையே 136 விதமான பரிவர்த்தனைகள் அதாவது காய்கறிகள், பருப்புவகைகள், எண்ணெய் வித்துகள், வாசனை பொருட்களுக்காக நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் இ-நாம் மூலமாக சிறப்பாக நடைபெறுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார். தொடக்கத்தில் இ-நாம் தளத்தில் 25 பொருட்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தற்போது 124 பொருட்கள் வர்த்தகமாகின்றன என்றார்.

மாநிலங்களிடையே வர்த்தகம் நடைபெறும்போது பிற சந்தை வாய்ப்புகள் விவசாயிகளுக்கு கிடைப்பதால் தங்களது விளைபொருளுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பயனடைகின்றனர் என்றார்.

பட்ஜெட் உரையில் 10 ஆயிரம் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் (எப்பிஓ) உருவாக்கப்படும் என்று உறுதி அளித்திருந்ததை குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் விவசாயிகளுக்கு நிறுவனங்கள் மூலமான கடன் எளிதாகக் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in