

இறக்குமதியாகும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர் வரை அதாவது 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிபர் ட்ரம்ப் வரி விதித்தார்.
இதற்கு சீனா தரப்பிலும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி, மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி வந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் சூழும் அபாயம் ஏற்பட்டது.
சீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள், நாற்காலிகள், கைப்பைகள் ஆகியவற்றுக்கு மீண்டும் இறக்குமதி வரியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் அறிவித்தார்.
அதன்படி, சுமார் 200 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10% வரி விதித்தார். இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு வரி குறைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வாகனங்களுக்கு ட்ரம்ப் அரசு வரியை அதிகரித்தது.இதனால் சீனா மட்டுமின்றி, ஜப்பான், ஜெர்மனி, இந்திய நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் வாகனங்களின் விலை உயர்ந்தது. இந்தநிலையில் வெளிநாட்டு வாகனங்களுக்கு மேலும 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.
இதற்கு ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ உட்பட பல நிறுவனங்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தன. அமெரிக்காவில் தங்கள் தொழிலை விரிவாக்கும் முயற்சிகளை கைவிடப்போவதாகவும் அந்த நிறுவனங்கள் அறிவித்தன. இந்த சூழலில் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.