Published : 12 Nov 2019 10:55 AM
Last Updated : 12 Nov 2019 10:55 AM

இந்தியாவின் இறக்குமதியை குறைக்க தீவிரம் காட்டும் மத்திய அரசு: பொருட்களை அடையாளம் காண அனைத்து துறைகளுக்கும் உத்தரவு

புதுடெல்லி

இந்தியாவின் இறக்குமதி வர்த்தகத்தை முடிந்தவரை குறைக்கமத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக இறக்குமதியைக் குறைக்கக்கூடிய பொருட்களை அடையாளம் காணஅனைத்து துறை அமைச்சகங்களுக்கும் வர்த்தகத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா உலக அரங்கில்பெரும் வர்த்தகப் பற்றாக்குறையில்உள்ளது. பெருமளவில் இறக்குமதியை நம்பியே இருக்கும் நிலை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறக்குமதி வர்த்தகம் 2018-19-ல் 507.5 பில்லியன் டாலராக உள்ளது. இது 2017-18 நிதி ஆண்டில் 465.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்இறக்குமதி 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால், இந்தியாவின் வர்த்தகச் சூழல் வலுவிழந்து காணப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவின் இறக்குமதி வர்த்தகத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. எந்தெந்த பொருட்களிலெல்லாம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க முடியும் என அடையாளம் காண திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு துறையினருடன் வர்த்தக அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசித்துவருகிறது. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ், கனரக தொழிற்சாலைகள், உரம், தகவல்தொழில்நுட்பம், மருந்துத் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்துவருகிறது. கச்சா எண்ணெய், தங்கம், எலெக்ட்ரானிக் பொருட்கள், உரம், பயிறு வகைகள், எந்திரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றில் பெருமளவில் இந்தியா இறக்குமதியை நம்பியே உள்ளது. இறக்குமதி அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

அதேபோல் நம்முடைய நாணயத்தின் மதிப்பையும் இது வெகுவாகப் பாதிக்கும். எனவே இந்தியாவின் இறக்குமதியை முடிந்தவரை குறைக்க இத்துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் உற்பத்தி துறையை வளர்த்தெடுப்பதே இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையிலிருந்து இந்தியாவை மீட்க முடியும் என்றும் வர்த்தகத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐஐஎஃப்டி கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ராகேஷ் மோகன் ஜோஷி கூறுகையில், இந்தியாவின் இறக்குமதியைக் குறைக்க மக்களின் நுகர்வைக் குறைப்பதற்கு மாறாக, இந்திய உற்பத்தித் துறையை அரசு வலுப்படுத்த வேண்டும். அதேபோல் பிறநாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் யோசித்து முடிவெடுக்கவேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x