

புதுடெல்லி
நடப்பு ஆண்டின் ஜுலை முதல்செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 4.66 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று சர்வதேச தகவல் கழகம் தெரிவித்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆன்லைன் விற்பனை விழாக்கள், விழாக்கால தள்ளுபடி விற்பனை, புதிய மாடல்கள் அறிமுகம் போன்ற பலநிகழ்வுகளால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதற்கு முந்தைய காலாண்டைக் காட்டிலும் 26.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்த போன்கள் விற்பனையில் பேசிக் போன்களின் விற்பனை 43.3 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17.5 சதவீதம் குறைவாகும். இதுதவிர 4ஜி தொழில்நுட்பம் கொண்ட பேசிக் போன்கள், 2ஜி மற்றும் 2.5ஜி உள்ளிட்ட போன்களும் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆனால், ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச், வட்டியில்லா சுலப தவணை போன்றவை ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன. முன்னிலையில் ஜியோமி, ஆப்பிள்ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஜியோமி 27.1 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. சாம்சங் 18.9%, விவோ 15.2%, ரியல்மி 14.3%,ஓப்போ 11.8% என பங்கு வகிக்கின்றன.
ஆனாலும், விலை குறைவான ஸ்மார்ட்போன்களின் விற்பனை மொத்த விற்பனையில் 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிரீமியம்ஸ்மார்ட்போன்களின் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து 51.3% பங்குடன்ஆப்பிள் முன்னிலை வகிக்கிறது.