Published : 11 Nov 2019 10:53 AM
Last Updated : 11 Nov 2019 10:53 AM

விருப்ப ஓய்வு திட்டத்தால் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கக் கூடாது: தொலைதொடர்பு துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி

பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் ஊழியர்களை பாதியாகக் குறைக்கும் நோக்கில் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து உள்ள நிலையில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை திட்டமிட வேண்டும் வேண்டும் என்று தொலைதொடர்பு துறை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களில் சேவை பாதிக்கப்படக் கூடாது என்று அது தெரிவித்துள்ளது.

பொதுத் துறை தொலை தொடர்புநிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இரண்டும் கடுமையான நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் மத்திய அரசு இவ்விரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் முடிவை அறிவித்தது.

அதன் பகுதியாக அதன் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் அவ்வாறு விருப்ப ஓய்வின் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறையும்பட்சத்தில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு, பணிகளை கவனமாக திட்டமிட வேண்டும் என்று தொலைதொடர்பு துறை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த வாரம், 4-ம் தேதி முதல்விஆர்எஸ் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஊழியர்கள் தங்கள் விருப்ப ஓய்வை அறிவித்துக்கொள்ள டிசம்பர் 3-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அறிவிக்கப்பட்டு ஒரு வாரம்கூட கடந்திராத நிலையில் பிஎஸ்என்எல் ஊழியர்களில், 57,000பேர் வீஆர்எஸ் பெற விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

நிறுவனத்தில் தற்போது 1.50 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். தற்போது அறிவித்துள்ள விஆர்எஸ்திட்டமானது 1 லட்சம் ஊழியர்களுக்குப் பொருந்தக் கூடியது. அதில் 77,000 பேர் வீர்ஆர்எஸ் பெறுவதை பிஎஸ்என்எல் இலக்காக கொண்டுள்ளது. இதனால் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையக்கூடும். விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம் ரூ.7 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே. புர்வார் கூறியதாவது: ‘வீர்ஆர்எஸ் திட்டம் தொடர்பாக மிக துல்லியமாக செயல்பட உள்ளோம். தற்போதுஅதுகுறித்த தரவுகள் அனைத்தையும் பெற்றுவருகிறோம்.

எப்படி இருந்தாலும் 80,000 அளவில் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பணிச் சூழல் அதற்கேற்ப மாற்றப்படும்’ என்று தெரிவித்தார். தற்போதைய நிலையில் சேவைப் பணிகளை பாதிப்பின்றி தொடரும் வகையிலான வழிமுறைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. சில வேலைகள் அவுட் சோர்ஷிங் மூலம் செய்து முடிக்க வாய்ப்பிருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த விஆர்எஸ் திட்டமானது 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நிரந்தர பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கும் பொருந்தும். வெளிப்பணி அலுவலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பணி பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாள் எக்ஸ்-கிரேஷியா கணக்கிடப்படும். அத்துடன் எஞ்சியுள்ள பணிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 25 நாள் ஊதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். எம்டிஎன்எல் நிறுவனமும் வீஆர் எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. அந்நிறுவனமும் டிசம்பர் 3 வரை கால அவகாசம் அளித்து உள்ளது.

நிறுவனத்தின் சீரமைப்புக்காக மத்திய அரசு மொத்தமாக ரூ.69,000 கோடி ஒதுக்கி உள்ளது. அதில் 4ஜி அலைக்கற்றை வாங்க ரூ.20,140 கோடியும், அதற்கான ஜிஎஸ்டிக்காக ரூ.3,674 கோடியும், விருப்ப ஓய்வு திட்டத்துக்காக ரூ.17,160 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த நான்கு வருடத்தில் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.15,000 கோடியும், நிலங்களை விற்பதன் மூலம் ரூ.38,000 கோடியும் நிதி திரட்டப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x