Published : 09 Nov 2019 07:26 AM
Last Updated : 09 Nov 2019 07:26 AM

பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்துள்ளது: மதிப்பீட்டு நிறுவனம் மூடி’ஸ் கருத்து

புதுடெல்லி

இந்தியப் பொருளாதாரம் மீதான தனது பார்வையை மூடி'ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை முன்பு இருந்ததைவிட தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா தற்போது பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களின் நுகர்வுத் திறன் குறைந்து இருப்பதால், உற்பத்தியும் குறைந்து உள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. வேலை இல்லா திண்டாட்டமும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்து வருகிறது.

இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார நிலை முன்பிருந்ததைவிட மோசமடைந்து இருப்பதாக மூடி’ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் மீதான தனது பார்வையை ‘நிலையானது’ என்பதிலிருந்து ‘எதிர்மறையானது’ என்று மாற்றியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிந்து உள்ளது. விரைவில் இந்தியா பொருளாதாரா மந்தநிலையில் இருந்து மீளாவிட்டால், அது மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது. விளைவாக இந்தியப் பொருளாதாரம் மீதான அதன் பார்வையை எதிர்நிலைக்கு மாற்றிஉள்ளது. அதேசமயம் இந்தியாவின் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நாணயங்களின் மதிப்பீட்டை ‘பிஏஏ2’-ஆக தொடர்ச் செய்துள்ளது.

ஒரு நாட்டின் மீதான பொருளாதாரப் பார்வை மற்றும் தர மதிப்பீடு அடிப்படையிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளும். இந்நிலையில் மூடி'ஸ் நிறுவனம் இந்தியப் பொருளாதாரம் குறித்த தனது பார்வையை எதிர் நிலைக்கு மாற்றியுள்ளதால், அந்நிய முதலீடுகள் மேலும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. மூடி’ஸ் நிறுவனத்தின் பொருளாதார பார்வை குறித்து மத்திய நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

அதில், சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அடுத்த நிதி ஆண்டில் அது 7 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளது. பல்வேறு பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் வளரும் திறனை கோடிட்டு காட்டி இருக்கின்றன. இந்தியா உலகளாவிய அளவில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகவே உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x