

உலகப் பொருளாதார வளர்ச்சியின் முன்னோடியாக திகழும் சீனாவைப் பிடிக்க இந்தியா இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
தற்போது உலகச் சந்தை வீழ்ச்சியை சீனாவின் சமீபத்திய வீழ்ச்சி பொருளாதாரம் தீர்மானித்துள்ளதையடுத்து ரகுராம் ராஜன் இவ்வாறு தெரிவித்தார்.
லண்டன் பிபிசி-க்கு ரகுராம் ராஜன் அளித்த நேர்காணலில், "சீனாவின் ஐந்தில் ஒரு பங்கில் நான்கில் ஒரு பங்குதான் இந்தியா, வளர்ச்சி விகிதத்தில் இந்தியா சீனாவை விஞ்சினாலும், அதன் விளைவின் அளவு என்பது வரும் காலங்களில் சிறிய அளவினதாகவே இருக்கும்” என்றார்.
உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின் படி அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 17 ட்ரில்லியன் டாலர்களுக்கும் கூடுதலானது, சீனா 10 ட்ரில்லியன் டாலரக்ளுக்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்தி அளவைக் கொண்டுள்ளது. ஒப்பிடுகையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 ட்ரில்லியன் டாலர்களே.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு சரிபாதியாக உள்ளது. இந்தியா தற்போது 7-8% வளர்ச்சியுடன் உள்ளது. மற்ற நாடுகளின் வளர்ச்சி விகிதம் இதைவிடவும் குறைவாகவே உள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரகுராம் ராஜன் கூறும்போது, “தற்போதைய உலக சந்தை வீழ்ச்சிகளுக்கு சீனாவை மட்டும் காரணமாக்குவது தவறு. மற்ற கவலைகளும் உள்ளன. இதுவரை நடந்து வருபவனவற்றை பார்க்கும் போது என்னளவில் என்ன கூற முடியும் என்றால், இன்னொரு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என்று கூறுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் பலவீனங்கள் வளர்ச்சி அடையுமா, அல்லது அகற்றப்படுமா என்பதை கண்காணிக்க வேண்டும்.
தடுமாறும் பொருளாதாரங்கள் மத்திய வங்கிகள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது நன்மையை விட தீங்கையே விளைவிக்கும். இந்தியாவில் நிலைமை வேறு, இங்கு இன்னமும் பணவீக்க விகிதத்துடன் போராடவே வேண்டியுள்ளது” என்றார்.