

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 226 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இதே காலாண்டில் 258 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவு, பயணிகளை வருகையால் வருமானம் உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இதற்கிடையே எதியாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதியாட் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
ஜூன் காலாண்டில் வருமானம் 5,658 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் இதர வருமானம் 128 கோடி ரூபாயாக இருக்கிறது.
தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்தான் லாப பாதைக்கு திரும்பியது.
கிடைக்கும் மொத்த வருமானத்தில் 59 சதவீதம் சர்வதேச செயல்பாடுகளால் கிடைப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்தார். ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறு வனம் லாபம் அடைந்தது குறிப் பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.7.18 கோடி.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு 7.93 சதவீதம் உயர்ந்து 400.65 ரூபாயில் முடிவடைந்தது.