Published : 07 Nov 2019 10:46 AM
Last Updated : 07 Nov 2019 10:46 AM

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

புதுடெல்லி

தாமாக முன்வந்து ஓய்வு பெறும்விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துக்கு நிதி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்த மறுநாளே, இந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்தது 70 ஆயிரம் முதல்80 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை நவம்பர் 4-ம் தேதியிலிருந்து டிசம்பர் 3-ம் தேதிக்குள் ஊழியர்கள் தேர்வு செய்யலாம் என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஆர்.கே. புர்வார் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் தற்போது 1.50 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். தற்போது அறிவித்துள்ள விஆர்எஸ் திட்டமானது 1 லட்சம்ஊழியர்களுக்குப் பொருந்தக் கூடியது. விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம் ரூ.7 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த விஆர்எஸ் திட்டமானது 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நிரந்தர பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கும் பொருந்தும். வெளிப்பணி அலுவலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பணி பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாள் எக்ஸ்-கிரேஷியா கணக்கிடப்படும். அத்துடன் எஞ்சியுள்ள பணிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 25 நாள் ஊதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். எம்டிஎன்எல்நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் நிதி நெருக்கடியை போக்க ரூ.69 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுஅனுமதித்தது. இரு நிறுவனங்களும் ஒன்றிணைத்து விஆர்எஸ் திட்டத்தை செயல்படுத்தி 2 ஆண்டுகளுக்குள் லாபப் பாதைக்கு திரும்ப வேண்டும் என அரசு குறிப்பிட்டுள்ளது.

4 ஜி அலைக்கற்றை வாங்க ரூ.20,140 கோடியும், ஜிஎஸ்டி-க்குரூ.3,674 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியை திரட்டிக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.17,160 கோடியும், ஓய்வுக்கால நிதி பொறுப்புகளை சமாளிக்கரூ.12,768 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x