Published : 04 Nov 2019 04:20 PM
Last Updated : 04 Nov 2019 04:20 PM

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கக் கடன் 23 ட்ரில்லியன் டாலர்களைக் கடந்தது 

வாஷிங்டன்,

அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் கடன் சுமை 23 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க நிதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எண்களில் குறிப்பிட வேண்டுமெனில் $23,009,431,755,907 என்று குறிப்பிடலாம்.

அதாவது தோராயமாகக் கூற வேண்டுமெனில் ஒவ்வொரு அமெரிக்கர் மீதும் உள்ள கடன் சுமை $69,750 ஆகும்.

இதில் 17 ட்ரில்லியன் டாலர்கள் தனிநபர்களிடமிருந்து வாங்கிய கடனாகும். மீதி 6 ட்ரில்லியன் டாலர்கள் அரசு ஏஜென்சிகளிடமிருந்தே பெறப்பட்டது என்கிறது இந்த புள்ளிவிவரம்.

இது புதிய தேசிய ‘சாதனை’ என்று அங்கு பொருளாதாரவாதிகளால் எதிர்மறை விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் நிதிச் சமனின்மை 2018-ல் 3.8% ஆக இருந்தது இந்த ஆண்டில் 4.6% ஆக அதிகரித்துள்ளது.

பீட்டர் ஜி. அறக்கட்டளையின் தலைவர் மைக்கேல் பீட்டர்சன் இது பற்றி கூறும்போது, “23 ட்ரில்லியன் டாலர்கள் என்பது அச்சமூட்டக்கூடிய ஒரு கடனாக உள்ளது. ஆனால் இது குறித்து ஆட்சியிலுள்ளோர் அச்சப்படுவதாகத் தெரியவில்லை” என்றார். அவர் மேலும் கூறும்போது, வலுவான ஒரு பொருளாதாரத்தில் இத்தகைய கடன் அதிகரிப்பு பொறுப்பற்றது என்பதுடன் தேவையற்றது, என்றார்.

முன்னாள் ஜனநாயகக் கட்சி அதிபர் பராக் ஒபாமாவை நிதிப்பற்றாக்குறைக்காக அடிக்கடி சாடிய தற்போதைய அதிபர் ட்ரம்ப்பின் ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை 50% அதிகரித்துள்ளது. ட்ரம்ப் பதவியேற்கும் போது 19.9 ட்ரில்லியன் டாலர்களாக இருந்த தேசியக் கடன் ட்ரம்ப் ஆட்சியில் 23 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

2019 நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அரசு கடன்கள் மீதான வட்டிச் செலவினங்களுக்காகவென்றே 376 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. அதாவது அமெரிக்க ராணுவ பட்ஜெட்டை ஒப்பிடும் போது இது அதில் பாதி என்கின்றனர் பொருளாதாரவாதிகள். கல்வி, விவசாயம், போக்குவரத்து, மற்றும் வீட்டு வசதி ஆகிய அத்யாவசியத்துக்குச் செலவு செய்வதை விட இது கடன் வட்டி செலுத்துதல் தொகை அதிகம்.

அதிபர் ட்ரம்பின் ஆட்சியின் கீழ் ராணுவச் செலவுகள் அதிகரித்துள்ளது ஆயுத உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு மிலிட்டரி செலவுகள் 550 பில்லியன் டாலர்களிலிருந்து 700 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x