Published : 04 Nov 2019 09:58 AM
Last Updated : 04 Nov 2019 09:58 AM

ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் பங்குகொள்ளாவிட்டால் இந்தியாவின் ஏற்றுமதி, முதலீடு பாதிக்கப்படும்: இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கருத்து

புதுடெல்லி

பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந் தந்தில் (ஆர்சிஇபி) இந்தியா பங்குகொள்ளா விட்டால், அது பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.

நாளை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆர்சிஇபி தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். வர்த்தக உறவு தொடர்பாக இந்தியாவின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுவது பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்று முன்பே அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆர்சிஇபி தொடர்பான ஒப்பந்தங்களுக்கு இந்தியா உடன்படாவிட்டால் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீடு பாதிக்கப்படும் என்று சிஐஐ தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கிடையேயான பரஸ்பர வர்த்தக உறவு, புதிய முதலீடுகள், பொருளா தார ஒப்பந்தங்கள், தொழில் சேவை ஆகிய வற்றை மேம்படுத்துவதற்காக பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு (ஆர்சிஇபி) 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் 16 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன் ஆகிய நாடுகள் அவற்றில் அடங்கும்.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் கோரிக்கைகளை சீனா ஏற்க மறுத்து வந்தது. இந்தியாவின் கோரிக்கைகளை சீனா ஏற்கும் பட்சத்திலேயே இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா உடன்படும் என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சீனா என்ற ஒரு நாட்டை மட்டும் கருத்தில் கொண்டு இந்தியா இதில் முடிவு எடுக்கக் கூடாது. நீண்ட கால அடிப் படையில் ஆர்சிஇபி-யால் கிடைக்கக்கூடிய பலனையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று சிஐஐ-யின் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இந்திய நிறு வனங்கள் உள்நாட்டு அளவில் கவனம் செலுத்தி வரலாம். ஆனால், சில ஆண்டு களிலேயே அவை சர்வதேச அளவில் தன்னை விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலைக்குச் செல்லும். ஆர்சிஇபி உடனான ஒப்பந்தம் அதற்கு மிகவும் அவசியம் என்று கூறினார்.

ஆர்சிஇபி ஒப்பந்தம் ஏற்றுமதி ரீதியாகவும், முதலீடுகள் ரீதியாகும் புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது. அதில் பங்கேற்கும் பட்சத்தில் இந்தியாவின் ஏற்றுமதி உயரும். இந்நிலையில் இந்த ஆர்சிஇபி ஒப்பந்ததுக்கு இந்தியா உடன்படாவிட்டால், அது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற 15 நாடுகளுடனான வர்த்தக உறவும் பாதிக்கப்படும் என்று சிஐஐ குறிப்பிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு நிலவரப்படி, ஆர்சிஇபி நாடுகளின் மக்கள் தொகை, உலகளாவிய மக்கள் தொகையில் 48 சதவீதத்தைக் கொண்டிருந்தது. உலகளாவிய உற்பத்தியில் 32 சதவீதத்தையும், வர்த்தகத்தில் 31 சதவீதத்தையும் ஆர்சிஇபி நாடுகளே கொண்டிருந்தன. இந்நிலையில் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பது மிகவும் அவசியம் என்று சிஐஐ வலியுறுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x