

புதுடெல்லி
முன்னணி மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட் அதன் 7,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த வேலை நீக்கம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட காக்னிசன்ட் நிறுவனத்தில், பெருமளவில் இந்தியர்களே பணிபுரிகின்றனர். இந்நிலையில் இந்த வேலை நீக்க நடவடிக்கையால் இந்தியப் பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காக்னிசன்ட் நிறுவனத்தின் சிஇஓ பிரையன் ஹம்ப்ரிஸ் கூறியபோது, ‘சமீபத்திய சில மாதங்களாக நிறுவனச் செயல்பாடு ரீதியாக புதிய திட்டங்களை வகுத்து வருகிறோம். நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை எளிமைப்படுத்த உள்ளோம். அதன் பகுதியாக சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிக்கன நடவடிக்கையாக 7,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை மற்றும் உயர் பதவியில் இருக்கும் 12,000 பணியாளர்களை அவர்கள் தற்போது வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 7,000 பேர் அளவில் வேலை நீக்கம் செய்யப்பட உள்ளனர். மீதமுள்ள 5,000 நபர்களை திறன் மேம்பாடு உட்பட மறுசீரமைப்புக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டு பிரிவில் அதிக வேலை நீக்கம் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.
உலகளவில் காக்னிசன்ட் நிறுவனத்தில் 2,89,000 பேர் பணிபுரிகின்றனர். அதில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்நிலையில் இந்தப் பணி நீக்கத்தால் இந்தியப் பணியாளர்களே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
காக்னிசன்ட் நிறுவனம் அதன் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையை நேற்று வெளியிட்டது. செப்டம்பர் மாதம் முடிந்த மூன்றாம் காலாண்டில் (அமெரிக்க நிதி ஆண்டின்படி) ரூ.3,480 கோடி (497 மில்லியன் டாலர்) லாபம் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 4.1 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டு இதே காலத்தில் அந்நிறுவனம் ரூ.3,340 கோடி (477 மில்லியன் டாலர்) லாபம் ஈட்டியது. அதேபோல் அந்நிறுவனத்தின் வருவாய் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ.29,750 கோடியாக (4.25 பில்லியன் டாலர்) உள்ளது.