

மும்பை, பிடிஐ
தொலைத் தொடர்புத் துறையில் ‘முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி’ இருப்பதாகக் கோரி அரசின் நிதி ஆதரவு தேவை என்று தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் அமைப்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியது. இதனை எதிர்த்து ரிலியன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்புக்கு (COAI)
கடுமையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதாவது அரசுக்குச் சேர வேண்டிய தொகை நிலுவையை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிஓஏஐ மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியது. சி.ஓ.ஏ.ஐ. தன் கடிதத்தில் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு அளிக்க வேண்டி,அரசு இதில் தலையிடாவிட்டால் “முதலீடுகளும், அரசு வருவாயும் பாதிக்கப்படும். சேவைகளின் தரமும் சரிவடையும். ஏகபோகம் உருவாக்கப்பட்டு அரசின் லட்சியத் திட்டங்கள் பாதிக்கப்படும்” என்று கூறியிருந்தது.
இதனையடுத்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், தன் பதிலில் “தொலைத்தொடர்புத் துறை அமைப்பான செல்லுலார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு கற்பனையான ‘தொலைத் தொடர்பு நெருக்கடி’ என்று கூறி அரசை அச்சுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது. ’ஏகபோகம் உருவாக்கப்படும்’ என்று சிஓஏஐ கூறுவது ரிலையன்ஸ் ஜியோவை முதன்மைப்படுத்தித்தான் என்பதை சூசகமாகக் கருதிய ஜியோ ‘சிஓஏஐ கடிதத்தின் நோக்கம் சரியாக இல்லை’ என்று தன் கடிதத்தில் கண்டித்துள்ளது.
மேலும் கடும் வார்த்தைகளால் பதில் அளித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, “தொலைத்தொடர்பு கூட்டமைப்பு இப்படிப்பட்ட கடிதத்தை அனுப்புவதற்குப் புறக்காரணங்கள் இருக்கலாம். மற்ற இரு உறுப்பினர்களின் கட்டளையின் படி இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம். ஆனால் இது போன்ற தேவையற்ற செயல்பாடு அதனை தொழிற்துறை அமைப்பு என்பதாக நிரூபிக்கவில்லை மாறாக 2 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் ஒலிபெருக்கி என்பதையே நிரூபிக்கிறது.
இந்தத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தத் துறையில் போதிய அளவு முதலீடு செய்யாமல் முதலைக்கண்ணீர் வடித்து வருகிறது. ஆனால் ஜியோ ரூ. 1.75 லட்சம் கோடியை ஈக்விட்டி முதலீடு செய்துள்ளது. எனவே இவர்களது தோல்விகளுக்கு அரசைக் குற்றம் சுமத்த முடியாது.
இந்தத் தொலைபேசி நிறுவனங்களின் நிதிக் கடினப்பாடுகள் அவர்கள் எடுக்கும் வர்த்தக முடிவுகளால் விளைந்ததே. இவர்களின் தவறான நிதி நிர்வாகத்தினாலும் வணிகத் தோல்வியினாலும் விளைந்ததுதான். ஆகவே அரசு இவர்களுக்கு நிதி ஆதரவு அளிக்க முன்வருதல் கூடாது.
உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை தொலைத்தொடர்பு கூட்டமைப்பு பயன்படுத்துகிறது. எனவே அரசின் உதவியைக் கேட்பதை ரிலியன்ஸ் ஜியோ கடுமையாகக் கண்டிக்கிறது. அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளைச் சவுகரியமாகக் கொடுக்கும் அளவுக்கு இவர்களிடம் நிதிவசதிகள் உள்ளன.
அந்த இரண்டு தொலை தொடர்புச் சேவை நிறுவனங்களின் தோல்வி உண்மையில் அப்படி ஏற்பட முடியாத சூழலில் ஏற்பட்டாலும் இந்தத் துறையின் இயங்கு முறையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது, காரணம் நல்ல போட்டி சந்தையில் நிலவுகிறது” என்று தொலைத் தொடர்பு கூட்டமைப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ பதில் அளித்துள்ளது.