

வேலூர் மாவட்டத்தின் ‘குட்டி சிவகாசி’ என்றழைக்கப்படும் குடியாத்தம் நகருக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள்தான் பிரதான அடையாளம்.
ஒரு காலத்தில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தந்த தீப்பெட்டி தொழில் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்துவருகிறது.
தீப்பெட்டி தொழிலின் முதுகெலும்பான பெண்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல முடியாமல் முடங்கிவருகிறது. ஒருபக்கம் வர்த்தகம் பாதித்து நலிவடைந்த முதலாளிகள் தீப்பெட்டி தொழிலை கைவிட்டு செல்கின்றனர். இதன்மூலம் வேலையை பறிகொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவருகிறது.
70 ஆண்டு பாரம்பரியம்
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் நகரில் இருந்த சில தொழிலதிபர்கள் தங்களுடன் சில தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு சிவகாசிக்கு சென்று தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு குடியாத்தம் நகரில் தொழில் ஆரம்பித்தனர். இப்படித்தான் குடியாத்தம் நகருக்குள் தீப்பெட்டி தொழில் வந்தது. லாபகரமாக இருந்ததால் பலரும் இந்த தொழிலில் தயக்கம் இல்லாமல் ஈடுபட ஆரம்பித்தனர். குடியாத்தம் நகரில் கைத்தறி நெசவுக்கு அடுத்தபடியாக தீப்பெட்டி தொழில் மூலம் வருமானம் கொட்டியது. வடமாநிலங்களுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்தனர்.
50 ஆயிரம் பேருக்கு வேலை
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடியாத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங் களில் 600-க்கும் மேற்பட்டோர் தீப்பெட்டி தயாரிப்பை குடிசை தொழிலாக செய்துவந்தனர். பெரிய அளவில் 2 நிறுவனங்கள் இயங்கின. இதன்மூலம், நேரடியா கவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பெண்களுக்குத்தான் வேலை வாய்ப்பு. இன்று திறமையான பெண் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை சம்பாதிக்கின்றனர்.
1980-ம் ஆண்டுக்குப் பிறகு தீப்பெட்டி தொழிலில் மெல்ல மெல்ல இயந்திரமயமாக்கல் அறிமுகமானது. இதன்மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. வேலை நேரம் மிச்சமாவது, அதிக உற்பத்தி போன்ற காரணங்களால் இயந்திர மயமாக்கலுக்கு முதலாளிகள் பச்சைக்கொடி காட்டினர். இதனால், வேலை இழந்த தொழிலாளர்கள் பலர் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இன்றைய நிலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர்.
பொருளாதார கொள்கையால் நலிவு
குடியாத்தம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் ரூ.10 லட்சம் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தனர். 90களுக்கு பிறகு இந்த தொழிலின் போக்கு மாறியது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பரஸ், பொட்டாஷியம் குளோரைடு, மெழுகு, வஜ்ஜிரம் உள்ளிட்டவை டாலர் வர்த்தகத்திற்கு மாறியதால் தீப்பெட்டி தொழில் வளர்ச்சி போக்கு மாறிவிட்டது. ஏற்றுமதி யை ஊக்குவிக்க மத்திய அரசு வழங்கிய 8 சதவீத மானியம் போதவில்லை. உலக சந்தைகளுக்கு ஏற்ப தீப்பெட்டிக்கான மூலப்பொருள் விலை ஒரு பக்கம் கூடிக்கொண்டே சென்றது. மறுபக்கம் இந்திய தீப்பெட்டி வர்த்தகத்தின் வாய்ப்பு களை சீனா, பாகிஸ்தான் நாடுகள் அபகரிக்கத் தொடங்கின. இந்திய தீப்பெட்டி விலையை விட சீனா, பாகிஸ்தான் தீப்பெட்டிகளின் விலை குறைவு. ஆப்பிரிக்க நாடுகளிலே சிலர் தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்த காரணங்களால் இங்குள் ளவர்களின் சந்தை வாய்ப்பு மங்கிப்போனது.
தீக்குச்சி மரம் அறுக்கத் தடை
தீக்குச்சிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ‘சாப்ட் வுட்' மரங்கள் கேரள மாநிலத்தில்தான் அதிகம் விளைகிறது. மரங்களாக வாங்கப்பட்டு இங்குள்ள மரம் அறுக்கும் "ஷா மில்" உதவியுடன் குச்சிகளாக மாற்றப்பட்டன. கேரள மாநிலத்தில் இருந்து மரங்கள் வாங்குவதை விட தமிழகத்தில் விவசாயிகள் உதவியுடன் பயிரிட மானியங்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையில், 2002-ம் ஆண்டு சுற்றுச்சூழல் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு தீக்குச்சி மரங்கள் வெட்டவும் ஷா மில்களில் இந்த மரங்களை அறுக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேறு வழியின்றி மீண்டும் கேரள மாநில வியாபாரிகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 கிலோ தீக்குச்சி ரூ.12-க்கு வாங்கப்பட்டது. இப்போது ஒரு கிலோ தீக்குச்சி ரூ.50-க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது.
நலிவுக்கு தீர்வு
மத்திய அரசு ஏற்றுமதிக்காக வழங்கிவரும் 8 சதவீத மானியத்தை 16 சதவீதமாக உயர்த்த வேண்டும். பகுதி நேர இயந்திர தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 6 சதவீத கலால் வரியை குறைக்க வேண்டும். சிட்கோ மூலம் பொட்டாஷியம் குளோரைடு, சிவப்பு பாஸ்பரஸ், மெழுகு, வஜ்ஜிரம் உள்ளிட்ட மூலப்பொருட்களை தடையின்றி மானிய விலையில் வழங்க வேண்டும்.
ஆப்பிரிக்க நாடுகளில் இழந்த தீப்பெட்டி சந்தையை மீண்டும் கைப்பற்ற புதிய வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தீக்குச்சி மரம் அறுக்க விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும். தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் முழு நேரமும் தொழிலாளர் களுக்கு வேலை கொடுப்பதுடன் நலிவடைந் துவரும் தீப்பெட்டி தொழிலை காப்பதுடன் குடியாத்தம் நகரின் அடையாளங் களை மீட்க முடியும் என்கின்றனர் இங்குள்ள தீப்பெட்டி தொழில் உரிமையாளர்கள்.