Published : 27 Oct 2019 10:23 AM
Last Updated : 27 Oct 2019 10:23 AM

ஆகஸ்ட் மாதத்தில் 13 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்; காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்தவர்களின் அடிப்படையில் தேசிய புள்ளி விவர அலுவலகம் தகவல்

புதுடெல்லி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகி இருப்பதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கான காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) பதிவு செய்து கொண்டவர்களின் அடிப்படையில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 1.49 கோடி புதிய ஊழியர்கள் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இஎஸ்ஐசி, அதில் புதிதாக இணைபவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019 ஆகஸ்ட் மாதம் வரையில் ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தில் மொத்தமாக 2.97 கோடி புதிய ஊழியர்கள் இணைந்துள்ளனர். அதேபோல், செப்டம்பர் 2017 முதல் 2018 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 83.35 லட்சம் ஊழியர்கள் அதில் இணைந்துள்ளனர்.

ஊழியர்களின் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான, வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 11.71 லட்சமாக இருந்தது. 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 61.12 லட்சம் புதிய ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ளனர். 2017 செப்டம்பர் முதல் 2018 மார்ச் வரையில் 15.52 லட்சம் புதிய ஊழியர்கள் இதில் இணைந்துள்ளனர். 2017 செப்டம்பர் முதல் 2019 ஆகஸ்ட் வரையில் மொத்தமாக 2.75 கோடி புதிய ஊழியர்கள் இபிஎஃப் திட்டத்தில் இணைந்துள்ளனர். வெவ்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதை துல்லியமான புள்ளிவிவரங்களாக கொள்ள முடியாது என்று தேதிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மட்டுமல்லாமல், இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்ட துறைகளின்கீழ் உருவாகி வந்த வேலைவாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே இவற்றை வேலைவாய்ப்பு குறித்த முழுமையான தரவுகளாக கொள்ள முடியாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் ஜூலை மாதம் இருந்த எண்ணிக்கையை விட ஆகஸ்ட் மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. ஜூலை மாதத்தில் 14.49 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அவை 13 லட்சமாக குறைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x