

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 19% உயர்ந்து 1,978 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,666 கோடி அளவுக்கு நிகரலாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 9,980 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 12,234 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இந்த காலகட்டத்தில் வங்கி யின் வட்டி வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 8,289 கோடி ரூபாயாக இருந்த வட்டி வருமானம் இப்போது 9,936 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1.34 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 1.38 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடன் 0.44 சதவீதத்தில் இருந்து 0.48 சதவீதமாக உயர்ந்தி ருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.57 சதவீதம் சரிந்து 580.45 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
டிவிஎஸ் மோட்டார் நிகரலாபம் 25% உயர்வு
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 25% உயர்ந்து 90.27 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 72.32 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருந்தது.
நிகர விற்பனை சிறிதளவு உயர்ந்திருந்தது. கடந்த வருடம் 2,263 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 2,590 கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்த காலாண்டில் இருசக்கர வாகன விற்பனை 8.8 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5.59 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையானது. இப்போது 6.08 லட்சம் வாகனங்கள் விற்பனையாயின. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்கு 4.39 சதவீதம் சரிந்து 251.55 ரூபாயில் முடிந்தது.