Published : 23 Oct 2019 11:41 AM
Last Updated : 23 Oct 2019 11:41 AM

திறமையாளர்களுக்கு இருமடங்கு ஊதியம்: புதிய தேர்வுமுறையை அறிமுகம் செய்கிறது டிசிஎஸ்

மும்பை

தகவல் தொழில்நுட்பத் துறை புதியமாற்றத்தை சந்தித்து வருகிற தற்போதைய சூழலில், பல்வேறு நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்த திறமையான பணியாளர்களை எதிர்பார்த்து வருகின்றன. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, மிகத் திறமையான பணியாளர்களை அடையாளம் காண்பதற்காக புதிய தேர்வு முறை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இருமடங்கு ஊதியம் அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனெவே புதிய பணியாளர்களை தேர்வு செய்வதற்கு டிசிஎஸ்நிறுவனம் தேசியத் தகுதித் தேர்வுஒன்றை கடந்த ஆண்டு அறிமுகம்செய்தது. முந்தைய காலகட்டத்தைப்போல் கல்லூரிகளுக்குச் சென்று வளாகத் தேர்வு மூலம் தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்யாமல், இந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் வேலைக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது கூடுதல் தேர்வு ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து, டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் நிர்வாகத்துணைத் தலைவர் மிலிந்த் லக்காட்கூறியபோது, ‘ஏற்கனெவே தேசியத் தகுதி தேர்வை நடத்தி வருகிறோம். அதில் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூடுதல்தேர்வு ஒன்றை நடத்த உள்ளோம்.

இந்தக் கூடுதல் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிப்பவர்களுக்கு இருமடங்கு ஊதியம் வழங்கப்படும். புதிதாக கல்லூரி படிப்பு முடித்து வருபவர்களுக்கு, வெளி நிறுவனத்தில் இருந்து டிசிஎஸ் நிறுவனத்துக்கு வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த தேர்வு பொருந்தும். டிசிஎஸ் நிறுவனத்தில் மூன்று வருடத்துக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்கள் இந்தத்தேர்வை எழுத முடியும். இதில்தேர்ச்சி பெறுபவர்கள் ‘ஹாட்டேலண்ட்’ என்று அழைக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) என்.ஜி. சுப்ரமணியம் கூறியபோது, ‘தொழில் நுட்பச் சூழல் தற்போது புதிய மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கேற்ப புதியதொழில் நுட்பங்களில் திறமை வாய்ந்த ஊழியர்களின் தேவைஅதிகரித்து உள்ளது. அதை கருத்தில் கொண்ட இந்தப் புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உலகில் மிகப் பெரும் நிறுவனங்கள் பணிபுரியும் அளவு தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த அளவிற்கு இந்தத் தேர்வு மிகக் கடினமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய தகுதித் தேர்வில் 30,000 தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் முதன்மையான 1,300 பேர் இந்த கூடுதல் தகுதித் தேர்வை எழுத உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x