Published : 23 Oct 2019 11:37 AM
Last Updated : 23 Oct 2019 11:37 AM

நிதி தணிக்கை குளறுபடி எதிரொலி: நியூயார்க் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 14% சரிவு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தணிக்கை தகவல்கள் தவறாக வெளியிடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நியூயார்க் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை இந்நிறுவனப் பங்குகள் 14 சதவீத அளவுக்கு சரிந்தன.

அமெரிக்காவின் பங்குச் சந்தை பரிவர்த்தனை ஆணையத்துக்கு (எஸ்இசி) அனுப்பப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத அனாமதேய புகாரில் இன்ஃபோசிஸ் நிறுவனம் குறித்த புகார் இடம்பெற்றிருந்தது. அதில் நிறுவனத்தின் இயக்குநர் கள் குழு செயல்பாடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து எஸ்இசிஆய்வு செய்ய முடிவு செய்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்காவில் உள்ளபுரோக்கர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மற்றும்இடிஎஸ் ஆகிய நிறுவனங்களின் நிதி நிலை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சத்யம் நிறுவனத்துக்கும், தணிக்கை செய்த பிடபிள்யூசி நிறுவனத்துக்கும் 1.75 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு இதேபோல் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா மீதும்புகார் மெயில்கள் அனுப்பப்பட்டன. இன்ஃபோசிஸ் கையகப்படுத்திய இரு நிறுவனங்களும் அவரது தனிப்பட்ட ஆதாயத்துக்காக கூடுதல் தொகைக்கு வாங்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.

அதேபோல நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சாலுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகைவழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அதுகுறித்து விசாரிக்கப்பட்டதில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என்பது நிரூபணமானது. ஆனாலும் அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விஷால் சிக்கா உள்ளிட்ட சிலர் பதவி விலக நேர்ந்தது.

இப்போது பங்குச் சந்தைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் நேர்மையான பணியாளர்கள் என பெயரிடப்பட்டு இன்ஃபோசிஸ் கையாண்ட வாடிக்கையாளர் நிறுவனங்களான வெரிசோன், இன்டெல்,ஏபிஎன் ஆம்ரோ மற்றும் ஜப்பானில் உள்ள துணை நிறுவனங்களில் பெறப்பட்ட தொகையில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் சேவையளிக்கும் பெரிய நிறுவனங்களுக்கான சேவை மூலம் லாபம் கிடையாது. ஆனால் லாபம் கிடைக்கும் எனசிஇஓ சலீல் பரேக் தெரிவித்துள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் லாபம் மட்டுமே கடந்த காலாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உரையாடல் பதிவுகள் தங்களிடம் உள்ளதாகவும் அந்தபுகார் மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கைஅதிகாரி எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த பிரச்சினை தொடர்ந்து விவாதிக்கப்படாமல் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்றும் அந்த மின்னஞ்சல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தணிக்கை குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்இசி-யின் அதிகாரப்பூர்வ ஊடகத்துறை அதிகாரி ஜூடித் பர்ன்ஸ்கருத்து எதையும் வெளியிடவில்லை. நிறுவனத்தின் துணை தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ஜெயேஷ் சங்ரஜ்கா பதவி விலகிய சில தினங்களிலேயே இப்பிரச்சினை உருவாகியுள்ளது. அவர் இந்நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 16.7 சதவீதஅளவுக்குச் சரிந்தன. வர்த்தகம் முடிவில் ஒரு பங்கு விலை ரூ.640 என்ற விலையில் வர்த்தகமானது. நிறுவனத்தின் தணிக்கைக் குழு சுதந்திரமாக செயல்பட்டு இதுகுறித்து முடிவெடுக்கும் என்று இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன்நிலகேணி செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x