

இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்தியஅரசு புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. 500 மில்லியன் டாலருக்கு (ரூ.3,500 கோடி)மேல் முதலீடு செய்ய உள்ளவர்களுக்கு, அரசு அங்கீகாரம் தொடர்பான அனைத்து நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் உதவும் விதமாக உறவு மேலாளரை அரசே நியமிக்க உள்ளது.
முதலீடுகள் மேற்கொள்பவர்கள், அது தொடர்பாக உள்ளூர் அதிகாரி முதல் மத்திய அமைச்சகம் வரை பல்வேறு தரப்புகளிடமிருந்து வெவ்வேறு வகையான அனுமதி பெற வேண்டும். இதனால் முதலீடு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது, இந்நிலையில் 500 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்ய உள்ளவர்களுக்கு அரசே இது தொடர்பாக அதிகாரியை நியமிக்கும். அவர் மூலம்முதலீடு தொடர்பான, மாநில அரசு முதல் மத்திய அரசு வரையிலான அனைத்து நடைமுறை செயல்பாட்டுகளையும் முதலீட்டாளர்கள் முடித்துக் கொள்ளலாம்.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற அமைப்பும் இணைந்து இந்தப் புதிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
இது குறித்து தொழில் மற்றும்உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை செயலர் குருபிரசாத் மொகபாத்ரா கூறியபோது, ‘முதலீடுகளை பெருக்கச் செய்வதற்காக அது தொடர்பான நடைமுறைச் சிக்கலை எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் புதியநடைமுறையை கொண்டு வர உள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் இதுதொடர்பாக கலந்தோலோசிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய அதிகாரப் பூர்வ ஒப்புதலுக்காக இந்தத் திட்டம் தொடர்பான விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.