

புதுடெல்லி
இந்தியா, அமெரிக்கா இடையிலான எரிசக்தி வர்த்தகம் நடப்புநிதி ஆண்டில் 1,000 கோடி டாலர்அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், திரவ எரிவாயு (எல்என்ஜி), நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி அளவு தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் நடைபெறும் இந்தியா – அமெரிக்கா உத்திசார் மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: கடந்த ஆண்டு இரு நாடுகளிடையிலான எரிசக்தி வர்த்தகம் 700 கோடிடாலர் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக அளவில் கச்சா எண்ணெய், திரவ எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை தற்போது அதிக அளவில் உள்ளது. பிற நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி அதிகரித்துள்ளதைப் போல, அமெரிக்காவிலிருந்தும் மிக அதிக அளவில் பொருட்கள் இறக்குமதியாகின்றன என்றார்.
சவூதி அரேபியாவில் உள்ள ஆரம்கோ சுத்திகரிப்பு ஆலையில் தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவுக்கான சப்ளை பாதிக்கப்பட்டது. ஆனால் பற்றாக்குறை ஏற்படாத சூழல் நிலவியதற்கு அமெரிக்காவிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டதே காரணம் என்றார்.
அமெரிக்காவின் எரிசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இத்துறையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அபரிமித வளர்ச்சி உள்ளது என்றும் பிரதான் குறிப்பிட்டார்.