

விவசாய நிலங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் குத்தகை விதிமுறைகளை மாநில அரசுகள் தளர்த்த வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா வலியுறுத்தினார்.
நிதி ஆயோக் இணையதளத்தில் இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள கருத்துகள் வருமாறு:
2013-ம் ஆண்டின் நில கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலங்களை தொழில்துறைக்காகக் கையகப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. இத்தகைய சூழலில் மாநில அரசுகள்தான் தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.
அதற்கேற்ப நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விதிகளைத் தளர்த்த வேண்டும். விவசாய நிலம் மற்றும் விவசாய பயன்பாடு அல்லாத நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம்தான் இது சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத நிலமாக மாற்றுவதற்கு உரிய துறையிடம் அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.
இப்போது கொண்டு வரப்பட் டுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டம், தொழில்மயமாக்கலை ஊக்குவிப்பதோடு, நில உரிமை யாளர் நிலத்தை விற்காமல் அதை குத்தகைக்கு விடுவதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் பணம் பெறலாம். அத்துடன் ஒப்பந்த காலம் முடிந்த பிறகு குத்தகை தொகையை உயர்த்திக் கேட்பதற்கான உரிமை நில உரிமையாளருக்குக் கிடைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலங்களைக் கையகப்படுத்து வதில் உள்ள கடுமையான விதி முறைகள் எந்த காரணத்துக்காக போடப்பட்டனவோ அதற்கான அவசியம் இப்போது எழவில்லை. குத்தகைக்கு இருப்போருக்கு பாதுகாப்பாக சட்டங்கள் இருக் கின்றன. அதற்குப் பதிலாக நில உரிமையாளரையும் பாதுகாக்கும் வகையில் இது மாற்றப்பட வேண்டும்.
நிலத்தை குத்தகை விடுவது தொடர்பாக மாநில அரசுகள் போட்டுள்ள சட்டங்கள், நாடு சுதந்திரமடைந்தவுடன் போட்டவை யாகும். ஆனால் அந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் இப்போது இல்லை என்பதுதான் யதார்த்தமான சூழல். இதை நில உரிமையாளர்கள் உணர வேண்டும் என்று பனகாரியா குறிப் பிட்டுள்ளார்.
நாடு சுதந்திரமடைந்தபிறகு ஜமீன்தார் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, விவசாயிகள் அனை வருக்கும் நிலம் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
நிலங்கள் குத்தகைக்கு விடுவதில் வெளிப்படையான அணுகுமுறை கொண்டு வரப்படுவதன் மூலமும், நில உரிமையாளரும் குத்தகைதாரரும் பயனடையும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நிலம் கையகப்படுத்துவதில் உள்ள முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமெனில் நில ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப் பட வேண்டும். கர்நாடக மாநிலத்தில் அனைத்து நிலங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த வழியை பிற மாநிலங்களும் பின்பற்றினால் நில குத்தகை அளிக்கும் முறை எளிதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசுகள் நில சீர்திருத்த சட்டங்களை எளிமைப்படுத்த நிதி ஆயோக் உதவி செய்ய தயாராக உள்ளது. இதில் அனைவரது நலனும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
உர மானியம்
உர மானியம் உரிய வகையில் அளிக்கப்படுவதில்லை. இதில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும். சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதைப் போல உர மானியமும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்படும்போதுதான் இதில் உள்ள குறைகள் தீர்க்கப்படும் என்றார்.