Published : 16 Oct 2019 08:24 AM
Last Updated : 16 Oct 2019 08:24 AM

நிதி முறைகேடுகளைத் தடுக்க கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்: ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றுஅகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் தற்போது கூட்டுறவு வங்கிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படும் தணிக்கை முறை முடிவுக்கு வரும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ரிசர்வ் வங்கி தணிக்கை மேற்கொள்வதைப் போன்று அந்தந்த கூட்டுறவு வங்கிகளிலும் தணிக்கை நடத்த வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் தற்போதையை முறையைக் கைவிட்டுகூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 24 கூட்டுறவு வங்கிகளில் நிர்வாக அலுவலரை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட்டுறவு வங்கிகள்அனைத்தும் இரட்டை கட்டுப்பாட்டு வரம்புக்குள் உள்ளன. மாநில அரசுகளின் கூட்டுறவு பதிவாளர் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இவை செயல்படுகின்றன. இதனால் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகளும், நிதி கையாடல் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவற்றை முடிவுக்குக் கொண்டு வர ஒரே வழி அவற்றை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்று ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு சங்கம் அல்லது மாநில கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் வருகின்றன. இவை பன்முக மாநில கூட்டுறவு சங்கம் 2002-ம் ஆண்டு விதிகளின் கீழ் வருகின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை மாநில கூட்டுறவு சங்கங்களின்பதிவாளரால் மேற்கொள்ளப்படுகிறது. இவை மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் மேற்பார்வையில் செயல்படுகிறது.

இந்த வங்கிகளில் நிதி நடவடிக்கைகளை வரையறுப்பதோடு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது. இதனால் இவற்றை கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் ரிசர்வ் வங்கி வசம்இல்லை. வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் நலனைக் காக்கும் வகையில் இவற்றை முழு கட்டுப்பாட்டில் ரிசர்வ் வங்கி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x