Published : 16 Oct 2019 08:23 AM
Last Updated : 16 Oct 2019 08:23 AM

பொருளாதார தேக்க நிலைக்கு அச்சப்பட வேண்டாம்: முதலீடுகள் மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

புதுடெல்லி

தற்போது இந்தியா எதிர்கொண்டுவரும் பொருளாதார தேக்க நிலைசுழற்சி முறையிலானது. இந்த தேக்கநிலை குறித்து அச்சப்படத் தேவையில்லை. மாறாக இதுவே முதலீடுகள் செய்வதற்கான சரியான தருணம். முதலீட்டாளர்கள் இந்தச் சூழ்நிலையை ஒரு வாய்ப்பாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மத்திய ரயில்வே,வர்த்தகம் மற்றும் தொழில் துறைஅமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி வீதம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஆகும். இந்நிலையில், பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்குமுன், இந்த வாய்ப்பை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்திய எரிசக்தி மன்றம் தொடர்பாக டெல்லியில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவர், இந்தியாவின் பொருளாதார நிலை, முதலீடுகள், தொழில் வளர்ச்சி, இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு ஆகியவை குறித்து பேசினார். ‘கடந்த இரண்டு காலாண்டாகஇந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருப்பது உண்மைதான். ஆனால் இது நிரந்தராமனது அல்ல.

இது சுழற்சி முறையில் ஏற்படக் கூடியது. அனைத்து நாடுகளும் இதுபோன்ற பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது வழக்கம். இந்த பொருளாதார தேக்க நிலையைக் கண்டு குழம்பத் தேவையில்லை. தற்சமயம் இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்பு அதிக அளவில் உருவாகி உள்ளது.

முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’என்று கூறினார். பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து அவர் கூறியபோது, ‘முந்தைய ஆட்சி காலத்தைவிட கடந்தஐந்து ஆண்டுகளில் மத்திய அரசுஇரண்டரை மடங்கு அதிக அளவில்முதலீடுகளை உருவாக்கி உள்ளது.

இந்திய ரயில் சேவைத் துறைஅடுத்த 12 ஆண்டுகளில் 700 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. அதேபோல், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பெரும் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.4 டிரில்லியன் டாலர் அளவில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கென முதலீடு செய்யப்பட உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் உயர்த்தும். இதுதவிர, அந்நிய முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வரிச் செயல்பாடுகள் முறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் வரும் ஆண்டுகளில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். சில குறிப்பிட்டத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான வரம்புகள் தளர்த்தப்பட்டு உள்ளன. குறிப்பாக எரிசக்தி துறையில் 100 சதவீத அளவில் அந்நிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது’. என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவில் நிலவி வரும் விரிசல் குறித்து அவர் கூறியபோது, ‘இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை. சில கோரிக்கைகள் தொடர்பாக முரண்பாடுகள் இருக்கின்றன. அது இயல்பான ஒன்றுதான். அதுவே நல்ல உறவுக்கான அடிப்படையும் கூட. இரு நாடுகளின் வர்த்தக உறவு நல்ல நிலையிலேயே உள்ளது. முதலீட்டுக்கான பெரும் வாய்ப்பு உருவாகி வருகிறது’ என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x