

மும்பை
செப்டம்பர் மாத பயணிகள் வாகன விற்பனை தொடர்பான விவரங்களை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சரிவு காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
கார் விற்பனையை பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதத்தில் 41.09 சதவீதம் சரிவடைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை 22.33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் விற்பனை 38.71 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுமட்டுமின்றி வேறு சில துறைகளிலும் சரிவு ஏற்பட்டு பொருளாதார மந்த சூழல் காணப்படுகிறது.
இந்தநிலையில் செப்டம்பர் மாத பயணிகள் வாகன விற்பனை தொடர்பான விவரங்களை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பரில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை 23.7% சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு செப்டம்பரில் 2,23,317 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து 11 மாதங்களாக பயணிகள் வாகன விற்பனை சரிவடைந்து வருகிறது.
ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 2,584,062 வாகனங்கள் விற்பனையான நிலையில் கடந்த செப்டம்பரில் 2,00,4932 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மொத்தமாக 22.41 சதவீத அளவுக்கு விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.