

மும்பை
லட்சுமி விலாஸ் வங்கியுடன் (எல்விபி) இண்டியாபுல்ஸ் ஹவு சிங் பைனான்ஸ் நிறுவனத்தை இணைக்கும் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்க வில்லை. இரு நிறுவனங்களும் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கையை நிராகரிப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு நடவடிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான கார ணத்தை எல்விபி வெளியிட வில்லை. இருந்தாலும் இரண்டை யும் இணைப்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந் தன. இது தவிர இரண்டையும் இணைப்பது சரியான நடவடிக்கை யாக இருக்காது என்று நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவித் திருந்தனர். இதுகுறித்து கட்டுப் பாட்டு அமைப்புகளின் புலனாய்வு பிரிவு விசாரித்து அனுப்பிய தக வலும் பாதகமாகவே இருந்தது. இதனால் இணைப்பு நடவடிக் கையை ரிசர்வ் வங்கி நிரா கரித்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டுக் கடன் வழங்கும் இண் டியாபுல்ஸ் ஹவுசிங் நிறுவனம் வங்கித் துறை கட்டுப்பாட்டுக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த இணைப்பு நடவடிக்கையை இண்டியாபுல்ஸ் நிறுவனம் தீவிரமாக எதிர்பார்த் திருந்தது. இணைப்பு நடவடிக் கையால் எல்விபி-யிலிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்று நினைத்திருந்தது. ஏனெனில் வீட்டுக் கடன் துறைக்கு தற்போது வங்கியல்லாத பிற நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. இணைப்பு நடவடிக்கை நிறைவேறினால், வீட்டுக் கடன் பெறுவது எளிதாக இருக்கும் என்றிருந்த நிலைக்கு தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் இண்டியாபுல்ஸ் நிறு வனத்தில் நிதி நிர்வாகத்தில் குளறு படிகள் உள்ளதாக பிரபல வழக் கறிஞர் பிரசாந்த் பூஷன் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை இண்டி யாபுல்ஸ் நிறுவனம் மறுத்துள்ள போதிலும், நிறுவன இணைப்பு நிறைவேறாமல் போனதற்கு இதுவும் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி விண்ணப்பங்களை வரவேற்றது. அப்போது வங்கி தொடங்க இண்டியாபுல்ஸ் நிறு வனமும் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அப்போதே நிறுவனம் ஆர்பிஐ வகுத்திருந்த விதிமுறை களுக்குரிய தகுதியைப் பெற வில்லை என நிராகரிக்கப்பட்டது. இண்டியாபுல்ஸ் குழுமம் தற்போது ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நட வடிக்கைகளில் தனது பங் களிப்பை படிப்படியாக குறைத்து வந்துள்ளது. குழும நிறுவனங் களில் ரியல் எஸ்டேட் துறையில் 20 சதவீத அளவுக்கே பங்குகள் உள்ளன. இந்த இணைப்பை எல்வி பி-யும் தீவிரமாக எதிர்நோக்கி உருந்தது. இந்நிறுவனத்தின் மூல தன விகிதம் (சிஏஆர்) 6.46 சத வீதமாக உள்ளது. இது வங்கிக்கான விதிமுறைகளின்படி குறைவாகும்.
தற்போது ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு நடவடிக்கையில் எல்விபி வந்துள்ளது. வங்கி மிகப் பெரிய அளவு கடன்களை வழங்கி யுள்ளதாகவும் போதிய மூலதனம் இல்லாமல் சிரமப்படுவதாகவும் ஆர்பிஐ கருதுகிறது. தற்போது இரு நிறுவனங்களின் இணைப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது.
இதனிடையே இணைப்பு நடவடிக்கை நிராகரிக்கப்பட்டாலும் நிதி திரட்டும் நடவடிக்கை தொடரும் என்று எல்விபி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பங்குச் சந் தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரி வித்துள்ளது. ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வரும் எல்விபி ரூ. 26 ஆயிரம் கோடி டெபாசிட்களை திரட்டியுள் ளது. இந்த வங்கியில் மூன்று தலைமுறையாக கணக்கு வைத் திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். வங்கிக்கு நாடு முழுவதும் 571 கிளைகளும் 1,045 ஏடிஎம் மையங்களும் உள்ளன.
பங்கு விலை சரிவு
இணைப்பு நடவடிக்கை நிறைவேறாததால் எல்விபி மற்றும் இன்டியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நேற்று 23 சதவீத அளவுக்கு சரிந்தன. இன்டியாபுல்ஸ் நிறுவன பங்கு 18.85 சதவீத அளவுக்கு சரிந்து ரூ.195 என்ற விலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமானது. இது இந்நிறுவனம் கடந்த 52 வாரங்களில் சந்தித்திராத சரிவாகும். இதற்கு முன்பு இந்நிறுவன பங்கு அதிகபட்சமாக 22 சதவீதம் சரிந்து ரூ.187.50 என்ற விலையில் வர்த்தகமாகியிருந்தது. இதனால் நிறுவனத்துக்கு ரூ.1,936.90 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 5 சதவீதம் சரிந்து ரூ.25.65 என்ற விலையில் வர்த்தகமானது. இது கடந்த ஓராண்டில் சந்தித்திராத பெரும் சரிவாகும்.