

மும்பை
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி கண்டன.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.
இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சுணக்க நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கெனவே 4 முறை வட்டி விகிதத்தைக் ரிசர்வ் வங்கி குறைத்தது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. மும்பையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதத்தை 5வது முறையாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதன் மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் அடிப்படை வட்டியான, ரெப்போ ரேட் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோலவே பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து முன் கணிப்பையும் 6.1 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்து. ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சி குறைந்துள்ளதால் வளர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதனிடையே வட்டி குறைப்பு, பொருளாதார வளர்ச்சி சரியும் என்ற ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டால் பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவு கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 434 புள்ளிகள் சரிந்து 37,673 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 139புள்ளிகள் சரிந்து 11,174 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டது.