இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி கடன்: 250 மாவட்டங்களில் வங்கி ‘கடன் மேளா’

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை
நாடுமுழுவதும் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் வகையில் நிதியமைச்சக அறிவுறுத்தல்படி இன்று முதல் 4 நாட்களுக்கு 250 மாவட்டங்களில் பல்வேறு வகையான கடன்களை உடனடியாக வங்கிகள் வழங்குகின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது, ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு போன்றவற்றால் பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்தது. பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடும் நோக்கில் கடந்த மாதம் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக பல்வேறு வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார். அதுபோலவே பொருளாதார சுழற்சி ஏற்படும் பொருட்டு சிறு குறு நிறுவனங்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கு பெரிய அளவில் கடன் வழங்க கடன் மேளா நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

நாடுமுழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுப்பது என நிதியமைச்சகம் முடிவு செய்தது. இந்தநிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு நாடுதழுவிய அளவில் கடன் மேளா தொடங்குகிறது.

அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் உடனடி கடன் வழங்குகின்றன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரே‌‌ஷன் வங்கி உள்பட பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்த கடன் மேளாவில் பங்குகொள்கின்றன.

சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன.

சிறு, குறு தொழிற்சாலைகள், சிறு வர்த்தகர்கள் முதல் கடைநிலை வாடிக்கையாளர்கள் வரை ஒரே இடத்தில் இந்த கடன் வழங்கப்படுகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்கள் பற்றி விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக மேலும் 150 மாவட்டங்களில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கடன் மேளா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in