Published : 03 Jul 2015 11:30 AM
Last Updated : 03 Jul 2015 11:30 AM

கிரீஸ் நிதி நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தகவல்

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளா தார நிதி நெருக்கடி இந்திய பொருளாதாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய நகரங்களில் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறது. இக் கூட்டத்தில் மாநில பொருளாதாரம், முதலீடு, வரும் நாட்களில் செயல் படுத்தப்பட உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு இருக்காது என தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது வரை எதிர்பார்த்த அள விற்கு பருவமழை பெய்துள்ளது. எனினும், இரண்டு மூன்று மாதங்கள் கழித்து பருவமழையின் அளவை பொறுத்துதான் வட்டி விகிதம் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளா தார நிதி நெருக்கடி, இந்திய பொருளாதாரத்தை எவ்விதித்திலும் பாதிக்காது. இதற்குக் காரணம், இந்தியாவில் கிரீஸ் நாட்டின் முதலீடு மற்றும் ஏற்றுமதி மிகக் குறைவாக உள்ளது. அதேசமயம் அந்நிய செலாவணியின் மதிப்பில் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வதேச பொருளாதார நிலை தேக்க நிலையிலிருந்து முழு அள வில் மீளவில்லை. இந்தியாவின் பண மதிப்பு ஐரோப்பிய நாட்டு கரன்சிகளை ஒப்பிடும்போது ஏற்றம், இறக்கமாக உள்ளது. ஆசிய நாடுகளின் ஏற்றுமதி பின்னடைவை சந்தித்துள்ளது. இது இந்தியாவிலும் பிரதிபலிக்கிறது. 1930ம் ஆண்டு ஏற்பட்ட பொருளா தார தேக்க நிலையைப் போன்ற சூழல் உருவாகும் என்று முன்னர் குறிப்பிடவில்லை. ஆனால் அது தவறாக வெளியாகியுள்ளது. லண் டன் வர்த்தக கல்வி மையத்தில் பேசுவதற்கு முன்பாக நான்கு முறை அங்கு நிகழ்த்த வேண்டிய உரையை தெளிவாக படித்துப் பார்த்து பேசினேன். அப்படியிருந் தும் பத்திரிகைகளில் செய்தி வெளி யாகிவிட்டது என்றார் ராஜன்.

இந்தியா மட்டுமின்றி பரவலாக அனைத்து நாடுகளிலுமே நெருக்கடியான சூழல் நிலவுகிறது என்று ராஜன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நமது பொருளாதார கொள்கைகள்தான். நாட்டில் முடங்கியுள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்கள் அனைவரையும் நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வர நிதி ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில் அரசு வல்லுனர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இடம் பெறுவர். இக்குழு அடுத்த ஐந்தாண்டுக்குள் மக்களை எப்படி நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவது என்பது குறித்து வரைவு திட்டம் தயாரித்து அளிக்கும்.

வங்கி சாரா நிதி நிறுவனங் களை கட்டுப்படுத்தவும், பணப் பரிவரத்தனைகளை ஒழுங்குபடுத் தவும் தனி விதிமுறைகள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கிறது. சிமெண்ட் விலை சில மாநிலங்களில் அதிகமாக உள்ளது. அதேசமயம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சர்க்கரையின் விலை குறைந்துள்ளது.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

இச்சந்திப்பின் போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்கள் ஆர்.காந்தி, எச்.ஆர்.கான், எஸ்.எஸ்.முந்த்ரா மற்றும் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதக்கத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பணப் பரிவர்தனையை குறைத்து அதற்குப் பதிலாக மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மொபைல் வங்கி சேவையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x