Published : 30 Sep 2019 09:18 AM
Last Updated : 30 Sep 2019 09:18 AM

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க இடைக்கால டிவிடெண்டாக ரூ.30 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற அரசு திட்டம்

புதுடெல்லி

அரசு பல்வேறு வரி குறைப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பதால் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேறு வழிகளைத் திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால டிவிடெண்டாக ரூ. 30 ஆயிரம் கோடியைப் பெற முடிவு செய்துள்ளது.

2019-20 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு ஜிடிபியில் 3.3 சத வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நன்மைக்காகவும் அரசின் நன்மைக்காகவும் நிதிப் பற்றாக்குறையை இந்த இலக்குக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் மிகுந்த சரிவை யும் நெருக்கடியையும் சந்தித்துக் கொண்டிருப்பதால், கார்ப்பரேட் வரி குறைப்பு, சில துறைகளுக்கு ஜிஎஸ்டியில் சலுகை என பல்வேறு வரி குறைப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைகளால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் குறையும். அப்படி குறையும்போது நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். நிர்ணயிக்கப் பட்ட இலக்கை மீறி நிதிப் பற்றாக்குறை செல்ல வாய்ப்புள்ளது.

மேலும் பல்வேறு திட்டங்களை அறிவித் துள்ள நிலையில் அதற்கான செலவினங் களுக்கு நிதி தேவை. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் அரசு முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. முதலீடுகள் மேற்கொள்ளவும் போதுமான நிதி அவசியமாகிறது. எனவே நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால டிவிடெண்ட் பெற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தொகை ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முந்தைய நிதி ஆண்டில் ரூ.28 ஆயிரம் கோடியும், 2017-18 நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடியும் இடைக்கால டிவிடெண்டாக அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் அரசு நிதித் திரட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பங்கு விலக்கல் மூலமும் குறிப்பிட்ட நிதியைத் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பிமல் ஜலான் குழுவின் பரிந்துரை களின்படி உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை அரசுக்கு வழங்க முடிவு செய்தது. இதில் ஏற்கெனவே ரூ.28 ஆயிரம் கோடி டிவி டெண்டாக கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.90 ஆயிரம் கோடி டிவிடெண்டாக பெறப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதைவிட அதிகமாக ரூ.95,414 கோடி டிவிடெண்டாக அரசு வாங்கியிருக்கிறது.

பட்ஜெட்டில் அரசின் கடன் அளவு இந்த நிதி ஆண்டில் ரூ.7.10 லட்சம் கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் ரூ.5.35 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி ஆண்டின் ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் கடன் அளவு ரூ.4.42 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இது இந்த நிதி ஆண்டின் மொத்த கடன் அளவில் 63 சதவீதம் ஆகும்.

நிறுவன வரியை 10 சதவீத அளவுக்கு குறைத்ததால் அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ரெப்போ விகிதம் குறைக்கப்படும்

ரிசர்வ் வங்கி வரும் அக்டோபர் 4-ம் தேதி அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்திலும் ரெப்போ விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தொடர்ச்சியாக நான்கு நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 1.10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பெரிய அளவில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வில்லை. அதேசமயம் வட்டிக் குறைப்பின் பலனும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், பணவீக்கமும் கட்டுக்குள் இருந்துவருகிறது. சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட்டில் 3.21 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், பெரிய அளவில் உயரவில்லை என்பதால், ரிசர்வ் வங்கி சமாளிக்கக்கூடிய பணவீக்கமாகக் கருதுகிறது. எனவே பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, வட்டிக் குறைப்பு நடவடிக்கை இந்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் எடுக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x