அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கு தடை: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கு தடை: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி
அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்பனையானது.

இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ‘‘உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயத்தை எடுத்துச் செல்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. வெங்காயம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம். 50 ஆயிரம் டன்கள் அளவுக்கு வெங்காயம் கையிருப்பு உள்ளது. எனவே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கருத வேண்டிய அவசியம் இல்லை’’ எனக் கூறியிருந்தார்.

அதுபோலவே வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பகுதிகளிலும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் நேரடியாக வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றன.

இந்தநிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் பொருட்டு அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in