தொடர் நஷ்டம், அதிக வாராக் கடன்: லக்ஷ்மி விலாஸ் வங்கி மீது ஆர்பிஐ அவசர நடவடிக்கை

தொடர் நஷ்டம், அதிக வாராக் கடன்: லக்ஷ்மி விலாஸ் வங்கி மீது ஆர்பிஐ அவசர நடவடிக்கை
Updated on
2 min read

புதுடெல்லி

அதிக அளவிலான வாராக் கடன் மற்றும் போதிய நிதி மூலதன மின்மை போன்ற காரணத்தினால் லக்ஷ்மி விலாஸ் வங்கியை, பிசிஏ என்றழைக்கப்படும் ‘அவசர திருத்த நடவடிக்கை’யின்கீழ் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.

கடந்த வாரம் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள் மீது மோசடி, சதி திட்டம், முறைகேடு ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வங்கிகளில் நிதி ஆதாரம் முறை யான அளவில் இல்லாதபோதும், அதன் வாராக் கடன்களின் அளவு அதிகரிக்கும்போதும் அந்த வங்கி களை முறைப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி அவற்றை தனது கண்காணிப்பில் கொண்டு வந்து திருத்த நடவடிக்கை எடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்தக் கட்டுப்பாடு தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மீது கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘இதனால் வங்கியின் அன்றாட செயல்பாடுகள் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகாது. குறிப்பாக வைப்புத் தொகை பெறுதல், வழங்குதல் போன்ற செயல்பாடுகள் வழக்கமாக நடை பெறும். ஆனால், ஒவ்வொரு மாத செயல்பாடுகளை லக்ஷ்மி விலாஸ் வங்கி மாதாந்திர அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண் டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்கீழ் உள்ள வங்கிகள், பிற நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் அளிக்க முடியாது. கடன் அளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதேபோல் புதிய கிளைகள் எதுவும் தொடங்க முடியாது.

ஜுன் காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கி ரூ.237 கோடி இழப்பை சந்தித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் அது ரூ.124 கோடியாக இருந்தது. வாராக் கடன்களின் அளவும் ஜூன் காலாண்டில் 17.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் அது 10.73 சதவீதமாக இருந்தது.

நிதி சேவை நிறுவனமான ரெலிகேர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வங்கி இயக்கு நர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. ரெலிகேர் நிறுவனம் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் ரூ.790 கோடி அளவில் டெபாசிஸ்ட் செலுத்தி இருந்தது. ஆனால் அந்தத் தொகையை லக்ஷ்மி விலாஸ் வங்கி முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக ரெலிகேர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ரெலிகேர் கணக்கில் இருந்து ரூ.723 கோடியை ரான்பாக்ஸி நிறுவனத்தின் தலைவர்களான சிங் சகோதர்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரெலிகேர் நிறுவ னத்தின் தலைவர்கள், அதிகாரிகள் தான் இந்த முறைகேடுகளுக்கு காரணம். அவர்களது குற்றத்தை திசைதிருப்பவே வங்கியின் மீது குற்றம் சுமத்துகின்றனர். வழக்கு விசாரணைக்கு முழு ஒப்புதல் தருவதாகவும், யார் மீது குற்றம் என்பதை கண்டுபிடிப்பதில் உறுதி யாக இருப்பதாகவும் லக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் மாதத் தில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள் குழு, இந்தியாபுல்ஸ் வீட்டு கடன் நிறுவனத்தை லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் இணைப்பதற் கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித் தது. அதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் மாதம் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தசாரதி முகர்ஜி தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையிலும் கடன் பத்திரங்கள் விநியோகம் மூலம் ரூ.1,000 கோடி நிதி திரட்ட லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்து இருப்பது குறிப் பிடத்தக்கது.

யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, யுகோ வங்கி ஆகிய வங்கிகளும் ரிசர்வ் வங்கி யின் திருத்த நடவடிக்கையின்கீழ் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in