

மொபைல் செயலி மூலம் இயங்கும் டாக்ஸி நிறுவனமான உபேர், ஹைதராபாத்தில் 5 கோடி டாலர் முதலீடு (ரூ. 310 கோடி) செய்ய உள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் ஹைதராபாதில் 100 பணியாளர்கள் பணிபுரிவதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் உள்ள சர்வதேச அளவிலான அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் நேற்று தெலங்கானா அரசோடு இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களுக்கு தங்களது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே அதிக அளவிலான சந்தையை இந்தியாவில் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் தெலங்கானா தொழில் திறன் பயிற்சி மையத்தோடு இணைந்து 2000 நபர்களுக்கு பயிற்சி வழங்கவும் உபேர் கூட்டு வைத்துள்ளது.